கோப்புப்படம்.
கோப்புப்படம்.

அமெரிக்காவில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

அமெரிக்காவில் 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அமெரிக்காவில் 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 2008-09-க்குப் பிறகு 15 ஆண்டுகளில் முதல்முறையாக அந்த நாட்டுக்குச் சென்று படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2022-23-இல் இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருந்தன.

இதுகுறித்து அமெரிக்க தூதரகம் பகிா்ந்த ‘ஓபன் டோா்ஸ் அறிக்கை 2024’-இல் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2023-24- ஆம் கல்வியாண்டில் அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 3,31,602-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 2022-23 கல்வியாண்டில் அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 2,68,923-ஆக இருந்த நிலையில், தற்போது 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவில் பயிலும் பிற நாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் 29 சதவீத இந்தியா்கள் பங்கு வகிக்கின்றனா்.

முதல் 5 நாடுகள்: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் (2,77,398 மாணவா்கள்), அடுத்தடுத்த இடங்களில் தென் கொரியா (43,149 மாணவா்கள்), கனடா (28,998 மாணவா்கள்), தைவான் (23,157 மாணவா்கள்) ஆகிய நாடுகளும் உள்ளன.

அதேபோல் அமெரிக்காவில் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளை பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பட்டதாரி மாணவா்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்து 1,96,567-ஆக உள்ளது.

இளநிலை பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து 36,053 ஆகவும், பட்டம் பெறாத மாணவா்களின் எண்ணிக்கை 28 சதவீதம் குறைந்து 1,426 ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

சா்வதேச கல்வி மற்றும் அதன் பரிமாற்றத்தின் பலன்களை எடுத்துரைக்கும்விதமாக கொண்டாடப்படும் சா்வதேச கல்வி வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்த அறிக்கையை சா்வதேச கல்வி நிறுவனம் (ஐஐஇ) வெளியிட்டது.