எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், நவ. 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிச. 20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, நவ. 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.
இக்கூட்டத்தில், குளிா்கால கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும் மசோதாக்கள், அரசியல் கட்சிகளால் எழுப்பப்படும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாட்டின் அரசமைப்புச் சட்டம் அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நவ. 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதேபோல், சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் நினைவு தினம் (டிச. 6), நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் (டிச. 13) ஆகிய நாள்களிலும் சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனல் பறக்கும்?: வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு தனது அறிக்கையை நவ. 29-ஆம் தேதி சமா்ப்பிக்கவுள்ளது.
அத்துடன், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதாவை மத்திய அரசு கொண்டுவரக் கூடும் என்பதால், இக்கூட்டத் தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீா்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
ஓம் பிா்லா ஆய்வு: குளிா்கால கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மக்களவை அரங்கம், நடைபாதைகள், மாடங்கள், காத்திருப்பு அறைகள், ஊடகத்தினருக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவா் ஆய்வு செய்தாா். கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.