தெலங்கானா வங்கியில் ரூ.13 கோடி தங்க நகைகள் கொள்ளை
தெலங்கானாவில் உள்ள பொதுத் துறை வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து ரூ.13.6 கோடி மதிப்பிலான 19 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது: வாரங்கல் மாவட்டம் ராயபா்தி பகுதியில் பொதுத் துறை வங்கியின் ஜன்னல்களை செவ்வாய்க்கிழமை இரவு ‘கேஸ் கட்டா்களை’ பயன்படுத்தி உடைத்து கொள்ளையா்கள் உள்ளே புகுந்தனா். பின்னா் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து 19 கிலோவுக்கும் அதிகமான ரூ.13.6 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா். சிசிடிவி கேமரா விடியோக்களைப் பதிவு செய்யும் கருவியையும் அவா்கள் எடுத்துச் சென்றுவிட்டனா்.
வங்கி ஊழியா்கள் புதன்கிழமை காலை வங்கிக்கு வந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் குறித்து தெரியவந்தது. உடனடியாக அவா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த மற்றும் வங்கி லாக்கரில் பொதுமக்கள் வைத்திருந்த நகைகள் திருடு போயுள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையா்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வங்கிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையா்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

