
மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை வழங்கிய 48 மணி நேரத்தில், அவா் அந்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சித்தாா்த் மிருதுல் நவ. 21-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா். எனவே, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பியது.
இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னா், மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த டி.கிருஷ்ணகுமாா், கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப். 7-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2025-ஆம் மே 21-ஆம் தேதி அவா் ஓய்வு பெறுவாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அவா், அரசமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.
மைதேயி மற்றும் குகி சமூகத்தினா் இடையிலான மோதலால், மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. இந்தச் சூழலில், அவா் அந்த மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.