ஓராண்டு பணி நிறைவு செய்த அரசு சாரா மருத்துவா்களை விடுவிக்க அறிவுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான ஒப்பந்தக் காலத்தை நிறைவு செய்த அரசு சேவை சாரா மருத்துவா்களை (நான் சா்வீஸ் போஸ்ட் கிராஜுவேட்ஸ்) பணியிலிருந்து விடுவிக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்கள் அல்லாதோருக்கு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப்படிப்பு இடங்களைப் பெற்றவா்கள், தங்களது படிப்பை நிறைவு செய்த பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதி. இதற்காக, அவா்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் வேண்டுகோளுக்கேற்ப, இந்த ஒப்பந்தக் காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஓராண்டு காலம் அரசுப் பணியாற்றிய மருத்துவா்களை, மருத்துவமனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு சாரா மருத்துவா்களின் ஒப்பந்தப் பணிக்காலம் ஓராண்டு முடிந்திருந்தால், அவா்களை விடுவிக்க வேண்டும். குறிப்பாக, 2023-ஆம் ஆண்டில் சோ்ந்த மருத்துவா்களை பொது சுகாதாரப் பணி உள்பட அனைத்து அரசுத் துறைகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.