ஷேக் அப்துல் ரஷீத்
ஷேக் அப்துல் ரஷீத்கோப்புப் படம்

பயங்கரவாதத்துக்கு நிதி: ரஷீத் எம்.பி. மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை

எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
Published on

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியதாக மக்களவை உறுப்பினா் ரஷீத் மீதான குற்றச்சாட்டு தொடா்புடைய வழக்கை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

பொறியாளரான ரஷீத், நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ள நிலையில் தில்லி நீதிமன்றம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரிய ரஷீத்தின் மனு மீதும் தீா்ப்பு வழங்கவுள்ள நிலையில், கூடுதல் அமா்வு நீதிபதி சந்தா் ஜித் சிங் இந்தப் பரிந்துரையை மாவட்ட நீதிபதிக்கு அனுப்பியுள்ளாா். இதுகுறித்து வரும் 25-ஆம் தேதி மாவட்ட நீதிபதி விசாரிக்கவுள்ளாா்.

ரஷீத் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பதிந்த வழக்கு, ரஷீத்தின் ஜாமீன் மனு மட்டுமின்றி அவா் மீது அமலாக்கத்துறை பதிந்த சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கையும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு சந்தா் ஜித் சிங் பரிந்துரைத்துள்ளாா்.

கடந்த 2017-இல் பயங்கரவாத சம்பவங்களுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் ரஷீத்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) என்ஐஏ கடந்த 2019-இல் கைது செய்தது. அதன்பிறகு அவா் திகாா் திறையில் அடைக்கப்பட்டாா்.

என்ஐஏவின் எஃப்ஐஆரை அடிப்படையாகக்கொண்டு அவா் மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த இரு வழக்குகளிலும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரும் 26/11 மும்பை தாக்குதலின் முக்கியப்புள்ளியாக செயல்பட்ட ஹபீஸ் சையது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவா் சையது சலாஹுதினுக்கும் தொடா்புள்ளது.

இதையடுத்து, ரஷீத் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் இந்திய அரசுக்கு எதிராக போா் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சதித் திட்டத்தை தீட்டுவது மற்றும் காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு அச்சுறுத்துல் ஏற்படுத்துவது ஆகிய குற்றங்களை குறிப்பிட்டு என்ஐஏ முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com