
காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.
3 மணி நிலவரப்படி 6.22 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் பிரியங்கா. இதன் மூலம் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11, 407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 14 மாநிலங்களில் இருக்கும் 48 பேரவைத் தொகுதிகளுக்கும், வயநாடு மற்றும் மகாராஷ்டித்தில் ஒரு தொகுதி என இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
காங்கிரஸ் - பிரியங்கா - 6,22,338
இந்திய கம்யூ. - சத்யன் மொகேரி - 2,11,407
பாஜக - நவ்யா ஹிரிதாஸ் - 1,09,939
பிரியங்கா மீது காங்கிரஸ் தொண்டர்களின் அதீத அன்பு..
ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, பிரியங்காவுக்கு வெறும் 19 வயதுதான். ஆனால், ராஜீவ் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பிரியங்காதான் நிரப்புவார் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும், ஏன் மக்களுமே கூட நினைத்திருந்தனர்.
ஆனால், அவ்வாறு நடக்கவில்லை, அவர் அரசியல் பார்வையிலிருந்து மறைத்துவைக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பட்டப்படிப்புகளை முடித்தார். 25 வயதில் தொழிலதிபர் ராபர்ட் வதேராவை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கும் தாயானார்.
ஆரம்பம் முதலே, தனது பாட்டி இந்திராகாந்தி போலவே இருப்பதால், காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிகம் பிடித்தவராக பிரியங்கா இருந்தாலும், அவர் அரசியலில் தலைகாட்டுவதாக இல்லை.
ஆனாலும் சோனியா மற்றும் ராகுலுக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே தான் 2008ஆம் ஆண்டு, தனது தந்தை ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியை சிறையில் சென்று சந்தித்தபோது பிரியங்காவின் மீது ஊடகங்களின் வெளிச்சம் பாய்ந்தது.
இதன் பிறகுதான், 2020 பொதுத் தேர்தலை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டார். இதனால், காங்கிரஸ் தொண்டர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஆனாலும் 2020 பொதுத் தேர்தல், 2022ஆம் ஆண்டு உ.பி. பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தாலும், யாரும் பிரியங்காவை குறைகூறவில்லை. காரணம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இருந்த அதீத அன்பும் ஆதரவும்தான்.
2019ஆம் ஆண்டு காங்கிரஸ் பொதுச் செயலர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் பிரியங்கா காந்தி. 2024 மக்களவைத் தேர்தலில் கூட, ரே பரேலி தொகுதியில் பிரியங்காவே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே கிட்டியது காங்கிரஸ் தொண்டர்களுக்கு.
இந்த நிலையில்தான், வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல், தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டார். அப்போதே பலரும் பிரியங்காவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கருதினார்கள்.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், அவரது வெற்றியும் காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் போலவே உறுதியாகிவருகிறது. வயநாடு தொகுதியில் இமாலய வெற்றியை உறுதி செய்து, அதுவும் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இத்தனைப்பெரிய வெற்றியை சாத்தியமாக்கவிருக்கிறார் பிரியங்கா காந்தி.
கவனம் ஈர்த்த வயநாடு
இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளிலேயே தேசிய அளவில் கவனக்குவிப்பு பெற்ற தொகுதியாக மாறியது கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்.
2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளிலும் வென்ற ராகுல் காந்தி, ரே பரேலி மக்களவைத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். அவர் வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற்றது.
நவ.13ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.