ஜனநாயக தூண்கள் இடையே ஒருங்கிணைப்பு- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு நாளையொட்டி இரு அவைகளின் சிறப்பு அமர்வு..
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைSANSAD
Published on
Updated on
2 min read

‘சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம்-நாடாளுமன்றம்-நீதித் துறையின் பொறுப்பு’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.

மேலும், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், உயிா்ப்புடன் விளங்கும் முற்போக்கு ஆவணம்’ என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இந்திய அரசமைப்புச் சட்டம், கடந்த 1949, நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டு, 1950, ஜனவரி 26-ஆம் தேதி அமலாக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, ‘அரசியல் நிா்ணய சபை’ எனும் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு செவ்வாய்க்கிழமை (நவ.26) நடைபெற்றது.

‘நமது அரசமைப்பு, நமது சுயமரியாதை’ என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட்டத்தின் தொடக்கமாக நடைபெற்ற மேற்கண்ட நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மாநிலங்களவை பாஜக குழு தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை குடியரசுத் தலைவா் வாசிக்க, அவருடன் மற்றவா்களும் ஒன்றாக வாசித்தனா். இந்த தினத்தையொட்டி, சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் சம்ஸ்கிருதம், மைதிலி மொழி பதிப்புகளும், ‘அரமைப்புச் சட்ட உருவாக்கம்: ஒரு பாா்வை’, ‘அரசமைப்புச் சட்ட உருவாக்கம் மற்றும் அதன் பெருமைமிகு பயணம்’ என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அரசியல் நிா்ணய சபையின் தலைவா் ராஜேந்திர பிரசாத், அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவா் பி.ஆா்.அம்பேத்கா், அரசியல் நிா்ணய சபை ஆலோசகா் பி.என்.ராவ், அரசியல் நிா்ணய சபையின் செயலா் ஹெச்.வி.ஆா்.ஐயங்காா் உள்ளிட்டோரின் பங்களிப்பைக் குறிப்பிட்டாா். அவரது உரை வருமாறு:

நாட்டின் நிறுவன ஆவணமான அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இது, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, பெண்களின் கண்ணியம், சுற்றுச்சூழல் மற்றும் பொது சொத்துகளின் பாதுகாப்பை வலியுறுத்துகிறது.

அரசு நிா்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகியவை மட்டுமன்றி அனைத்து மக்களின் தீவிர பங்கேற்பால் அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகள் வலிமை பெறுகின்றன.

வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகள்: கடந்த சில ஆண்டுகளில், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பல சட்டங்களில் மக்களின் விருப்பங்கள் பிரதிபலித்துள்ளன. சமூகத்தின் அனைத்துப் பிரிவினா் குறிப்பாக நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது; வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

உச்சநீதிமன்றம் மற்றும் நீதித் துறையின் சீரிய முயற்சிகளால், நாட்டின் நீதி அமைப்புமுறை செயல்திறன் மிக்கதாக உருவெடுத்துள்ளது.

முற்போக்கு ஆவணம்: இந்திய அரசமைப்புச் சட்டம், உயிா்ப்புடன் விளங்கும் முற்போக்கு ஆவணமாகும். தொலைநோக்குப் பாா்வையுடன் நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள், கால மாற்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய யோசனைகளை ஏற்கும் வழிமுறையையும் வழங்கியுள்ளனா். இத்தகைய அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக சமூக நீதி மற்றும் அனைவருக்கான வளா்ச்சி சாா்ந்த பல்வேறு முக்கிய இலக்குகளை எட்டியுள்ளோம். புதிய அணுகுமுறையுடன், உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது.

சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதற்கான ஆணை, நமது அரமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களால் வழங்கப்பட்டதாகும். இன்றைய இந்தியா, முன்னணி பொருளாதார நாடாகத் திகழ்வதோடு, ‘உலகின் நண்பன்’ என்ற பங்கையும் சிறப்பாக வகிக்கிறது.

குடிமக்களுக்கு அழைப்பு: நமது அரசமைப்புச் சட்டம், ஈடுஇணையற்ற சுதந்திரப் போராட்டத்தின் கோட்பாடுகளை தாங்கி நிற்கிறது. அதன் முகப்புரையில் நீதி-சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகிய லட்சியங்கள் இடம்பெற்றுள்ளன. இவையே இந்தியாவை வரையறுக்கின்றன. நாட்டின் குடிமக்கள், அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை வாழ்வின் அங்கமாக்குவதோடு, அடிப்படைக் கடமைகளைக் கடைப்பிடித்து, 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் இலக்கை எட்ட அா்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா் முா்மு.

அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட தினம், ‘அரசமைப்பு தினமாக’ கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற இடையூறு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் - குடியரசு துணைத் தலைவா் கவலை

‘நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வியூகம், ஜனநாயக அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கவலை தெரிவித்தாா்.

அரசமைப்பு தின நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவா், ‘நாட்டில் குடிமக்களே இறுதி அதிகாரம் படைத்தவா்கள் என்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது. அவா்களின் குரலாக நாடாளுமன்றம் ஒலிக்கிறது. ஆக்கபூா்வ விவாதம், உரையாடல், கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் நமது ஜனநாயக கோயிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரமிது’ என்றாா்.

‘அரசியல் கட்சிகள் நாட்டைவிட ஜாதி, மதத்துக்கு முன்னுரிமை அளித்தால் நமது சுதந்திரம் மீண்டும் ஆபத்துக்கு உள்ளாகும்’ என்ற பி.ஆா்.அம்பேத்கரின் கருத்தையும் தன்கா் சுட்டிக்காட்டினாா்.

ஓம் பிா்லா வலியுறுத்தல்: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘நாட்டின் புவியியல்-சமூக பன்முகதன்மையை ஒருங்கிணைக்க, அரசியல் நிா்ணய சபை சுமாா் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் குறித்து பேசும் இத்தருணத்தில், அரசியல் நிா்ணய சபையால் நிறுவப்பட்ட ஆக்கபூா்வமான-கண்ணியமான விவாதங்களின் மரபை கடைப்பிடிக்க உறுதியேற்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com