
பாகல்கோட்: கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியில், ஹேர் டிரையர் வெடித்துச் சிதறியதில், பெண்ணின் கை விரல்கள் துண்டான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அது விபத்தல்ல என்றும், கொலை முயற்சி என்பதும் தெரியவந்துள்ளது.
ஹேர் டிரையர் வெடித்துச் சிதறி, பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விசாரணையைத் தொடங்கியபோது, அதன் பின், காதலி, பக்கத்துவீடு, வெடிகுண்டு, கொலை முயற்சி என இவ்வளவு பெரிய கதை நீளும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நீண்ட உண்மை.
ஹேர் டிரையர் வெடித்ததில், ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியின் கை விரல்கள் துண்டானதாக ஒரு சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
ஆனால், அதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கும் சிட்டப்பா ஷீலாவந்த் என்கிற ஹுடெட்மணி (35) என்பவர் கர்நாடக மாநிலம் கோபால் பகுதிக்கு அருகே உள்ள குர்தாகெரி கிராமத்தைச் சேர்ந்தவர். சுரங்க நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த ஹேர் டிரையர் சசிகலா என்ற பெண்ணுக்கு நவ. 15 அன்று கொரியர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், தனக்கு வந்த கொரியரை பக்கத்து வீட்டுப் பெண் பசவராஜேஸ்வரியை வாங்கி பிரித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பார்சலை வாங்கிய பசவராஜேஸ்வரி, ஹேர் டிரையரை எடுத்து சுவிட்ச் போட்டு ஆன் செய்ததும் அது வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில், அவரது கை விரல்கள் துண்டானது.
முதலில், இதில் மின் பிரச்னை காரணமாகவே சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், விசாரணையில், அந்த ஹேர் டிரையரில் சிட்டப்பாதான், டெட்டனேட்டரை மறைத்து வைத்து சசிகலாவைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. தனக்கும் பசவராஜேஸ்வரிக்கும் இடையே இருந்த தொடர்பை, சசிகலா கண்டித்ததால், அவரைக் கொலை செய்ய சிட்டப்பா திட்டமிட்டார் என்று தெரிய வந்துள்ளது.
சிட்டப்பாவுடன் பசவராஜேஸ்வரிக்கு இருக்கும் தொடர்பு குறித்து அறிந்ததும் சசிகலா, கண்டித்திருக்கிறார். இதனால் ஊருக்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சி பசவராஜேஸ்வரியும் சிட்டப்பாவுடன் பேசுவதை நிறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிட்டப்பா சசிகலாவைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கடந்த 16 ஆண்டுகாலமாக கிரானைட் நிறுத்தில் வேலை செய்து வந்த சிட்டப்பாவுக்கு டெட்டனேட்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருந்ததால், ஹேர் டிரையருக்குள் அதனை மறைத்து வைத்து சசிகலாவைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஆனால், சசிகலாவுக்கு மாறாக, அந்த டெட்டனேட்டர் பசவராஜேஸ்வரி கையில் வெடித்துச் சிதறியது பிறகுதான் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிட்டப்பா கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.