மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்கள், எங்கும் கூட்டமாக கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பது, அவரது ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சரி, அலுவலகம் என எங்கும் தனது ஆதரவாளர்கள் கூட வேண்டாம் என்று செவ்வாய்க்கிழமை காலை ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில், மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றாக இணைந்துப் போட்டியிட்டு வென்றுள்ளோம். இப்போதும் ஒன்றாக இருக்கிறோம்.
என் மீது இருக்கும் அன்பு காரணமாக, ஆதரவாளர்கள் மும்பை நோக்கி வருவதோ, கூட்டம் கூடுவதோ வேண்டாம். என் மீதிருக்கும் அன்புக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக நான் இருக்கும் இடத்துக்கு வர வேண்டாம் என்று எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநில பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. எதிா்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே வென்றது.
ஆளும் கூட்டணியில் 132 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக சாா்பில் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வா் போட்டியில் முன்னணியில் இருக்கிறாா். பாஜகவுக்கு அடுத்து சிவசேனை 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளன.
இந்நிலையில், புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தனது தரப்பு முடிவை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.