வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டாா்.
சட்டோகிராமின் நியூமாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக கிருஷ்ணா தாஸ் உள்பட 19 போ் மீது நகரத்தின் கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணா தாஸை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் உள்ள் இஸ்கான் கோயில் தலைமை ஆன்மிக குரு சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை கண்டித்து, மேற்கு வங்கத்தில் இன்று(நவ. 27) பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் ஏராளமானோர் திரண்டு கொல்கத்தாவில் உள்ள வங்கதேச உயர் ஆணையரகத்தை முற்றுகையிட்டு பேரணியாகச் சென்று வங்கதேச அரசுக்கெதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி வங்கதேச உயர் ஆணையரகத்தை நோக்கி பேரணியாகச் சென்று சின்மய் கிருஷ்ண தாஸ் கைதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.
இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்கான் தலைவர்கள், ஓர் அமைப்பின் மீது ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றம் சுமத்துவது வருத்தமளிக்கிறது. சின்மய் கிருஷ்ண தாஸ் கைதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இஸ்கானை தடை செய்யக் கோரி, வங்கதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.