முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை என்று காபந்து முதல்வராக இருக்கும் சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி நீடித்துக்கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான், ஏக்நாத் ஷிண்டே தாணேவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரது உரையாடல் முழுவதும் விடியோவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த உரையில், மகாயுதி கூட்டணிக்கு மக்கள் அளித்த பேராதரவுக்கு மிக்க நன்றி. முதல்வர் யார் என்பது குறித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து மக்களுக்காக இதுவரை நான் செய்த பணிகள் திருப்தி அளிக்கின்றன. மீண்டும் முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை. மகாயுதி கூட்டணி சார்பில், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வோம் என்று ஏக்நாத் கூறியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சிரித்தபடி பல்வேறு பதில்களை அளித்துள்ளார்.
முதல்வர் பதவி தொடர்பாக எந்த மனக்கசப்பும் இல்லை, எந்த வேகத்தடையும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம், மகாராஷ்டிர முதல்வராக அவர் நீடிக்க மாட்டார் என்பதையே சூசகமாகக் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
மேலும் அவர் பேசுகையில், மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் என்னால் ஏதேனும் பிரச்னை இருக்கிறது என்றால், என்னைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம், நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்வேன் என்று கூறிவிட்டேன். நமது குடும்பத்தில், நீங்கள்தான் தலைவர். எவ்வாறு, பாஜகவில் உங்கள் முடிவை அனைவரும் ஒன்றுபோல ஏற்றுக்கொள்வார்களோ, அதுபோலவே நாங்களும் உங்கள் முடிவை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.