நமது நிருபர்
கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக ஹிந்து பிரிவில் பட்டியலின (எஸ்.சி.) ஜாதி சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் முதுநிலை பிரிவு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர் தனது தந்தை ஹிந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால் தான் ஒரு ஹிந்து என்றும் கூறி பட்டியலின ஜாதி சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர் மேற்கொண்ட விசாரணையில் அவரது தந்தை உள்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரிய வந்தது. இதனையடுத்து, செல்வராணிக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் மறுத்தார். இதைத் தொடர்ந்து, செல்வராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "செல்வராணி சிறு வயது முதல் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றியுள்ளார் என்பது அரசு தரப்பிலிருந்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர் பட்டியலின ஜாதி சான்றிதழ் கோரியதை ஏற்க முடியாது. மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்புவதையும், அவர்கள் சார்ந்த ஜாதியினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றால் சமூகப் பலன்களை வழங்க முடியாது.
அந்த வகையில், மனுதாரரான செல்வராணி மற்றும் குடும்பத்தினர் ஹிந்து மதத்துக்கு மறுமதமாற்றமானது தொடர்பான உரிய ஆதாரத்தை வழங்கத் தவறிவிட்டனர். எனவே, அவருக்கு பட்டியலினச் சான்றிதழ் வழங்க முடியாது' என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செல்வராணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: தான் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மதம் மாறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை சமூக நோக்கங்களை சிதைக்கிறது. சலுகைளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதம் மாறுவது என்பது அரசமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி. இந்தச் செயல் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு முரணானது. மனுதாரர் கிறிஸ்தவராக மாற ஞானஸ்நானம் பெற்ற பின்னர், தன்னை ஒரு ஹிந்துவாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது.
எனவே, அவரது இரட்டைக் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனடிப்படையில், பட்டியலினச் சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே' எனக்கூறி செல்வராணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.