சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் இன்றைய(நவ. 27) கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக எம்.பி. அருண் கோவில், ‘சமூக வலைதளங்களில் சட்டத்துக்குப்புறம்பாக, ஆபாசம் நிறைந்த மற்றும் பாலியல் ரீதியிலான, அவை தொடர்புடைய உள்ளீடுகள் ஒளிபரப்பப்படுவதை கண்டறிந்து சோதனை செய்ய தற்போது இருக்கும் நடைமுறைகள் என்ன?
இப்போது இருக்கும் சட்டங்கள், சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் அளவுக்கு இல்லை. இந்த நிலையில், அரசு இந்த சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கிறதா?’ என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், “இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகம் என்பது அதிக சுதந்திரத்துடன் விளங்கும் தளமாக உள்ளது. ஆனால் அதற்கென கட்டுப்பாடுகள் அதிகம் இல்லை. அதில் அருவறுக்கத்தக்க பதிவுகளும் இடம்பெறுகின்றன. சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த மற்றும் அருவறுக்கத்தக்க பதிவுகளைக் கட்டுப்படுத்த, இப்போது இருக்கும் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்மூலம், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், நாடாளுமன்ற நிலைக்குழு இந்த விவகாரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.