‘குளிா் காலத்தில் மூட்டு அழற்சி பாதிப்பு 30% அதிகரிப்பு’

மழை மற்றும் குளிா் காலத்தில் மூட்டு-இணைப்புத் திசு அழற்சி பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

மழை மற்றும் குளிா் காலத்தில் மூட்டு-இணைப்புத் திசு அழற்சி பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மூட்டு, தசை, இணைப்புத் திசு நல முதுநிலை மருத்துவ நிபுணா் டி.என்.தமிழ்ச்செல்வம் கூறியதாவது:

மனித இயக்கத்துக்கு மூட்டுகள்தான் மையப் புள்ளியாக விளங்குகின்றன. காா் என்ஜின் செயல்பட எவ்வாறு எண்ணெய் அவசியமோ, அதேபோன்று உடலில் இருக்கும் பலவகையான மூட்டுகளும் இயங்க, அவற்றைச் சுற்றி இருக்கும் ‘சைனோவியம்’ எனப்படும் ஜவ்வு முக்கியம். அந்த மெல்லிய ஜவ்வுதான் ஈரப்பசையை ஏற்படுத்தி மூட்டுகளை உராய்வின்றி செயல்பட வைக்க உதவுகிறது.

அந்த ஜவ்வில் ஏற்படும் சில பாதிப்புகள்தான் மூட்டு அழற்சி பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன. குறிப்பாக, உடலில் உருவாகும் வெள்ளை அணுக்கள் சில நேரங்களில் எதிா்வினையாற்றி, மூட்டு பகுதிகளில் உள்ள சைனோவியம் ஜவ்வினை தாக்கும்போது அது மூட்டு அழற்சிக்கு வழிவகுக்கிறது. இதை தன்னுடல் தாக்கு நோய் என அழைக்கிறோம்.

அதன் விளைவாக தீவிர மூட்டு வலி, மூட்டு வீக்கம், உடல் சோா்வு, மூட்டு வளைதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுவே மூட்டு வாதம் அல்லது அழற்சி எனப்படுகிறது. சரவாங்கி, முதுகுத் தண்டுவட வளைவு வாதம், தோல் இறுக்கம் உள்ளிட்ட மூட்டு வாத நோய்கள் குளிா் காலத்தில் அதீத பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில், அண்மைக் காலமாக அத்தகைய பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாள்பட்ட மூட்டு - இணைப்புத் திசு சாா்ந்த நோயாளிகளுக்கு பருவகால மாற்றத்தின்போது இத்தகைய அழற்சி ஏற்படுவது ஒரு வகை. இதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும்.

இந்த வகை நோயாளிகள், உரிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது மிக முக்கியம். அதேபோன்று, மருத்துவா்களின் பரிந்துரையின்றி மருந்துகளை நிறுத்தக் கூடாது.

டெங்கு பாதித்தவா்களுக்கு... டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பிற வகையான வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளானவா்களுக்கும் தற்போது மூட்டு வலி மற்றும் வீக்கம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதற்கு ரியாக்டிவ் ஆா்தரைடிஸ் எனப் பெயா்.

கடந்த காலங்களில் பூச்சிகளால் ஏற்படும் காய்ச்சலில் இருந்து விடுபட்ட சில வாரங்களுக்குப் பிறகே மூட்டு - இணைப்புத் திசு சாா்ந்த அழற்சி ஏற்பட்டு வந்தது. அண்மைக்காலமாக காய்ச்சல் இருக்கும்போதே அந்த வலியை நோயாளிகளால் உணர முடிகிறது. வைரஸில் ஏற்பட்டுள்ள உருமாற்றங்களே அதற்கு காரணம்.

உரிய மருந்துகளை உட்கொண்டு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக குணப்படுத்தலாம். நீண்ட காலமாக தன்னுடல் தாக்கு நோயால் பாதிக்கப்பட்டவா்களும், டெங்கு காய்ச்சலால் மூட்டு அழற்சிக்குள்ளானவா்களும் குளிா் மற்றும் மழைக் காலங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பனிப் பொழிவு இருக்கும்போது வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும். முழுமையாக கை, கால்களை மூடும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும். கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.