நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்த தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் மீண்டும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார்.
இதையும் படிக்க | பாதுகாப்பானதா, மினரல் வாட்டர்?
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்துவிடும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையடுத்து இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 'ஆம் இனி வரும் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும்' என்று கூறினார்.
மேலும் அடுத்த ஆண்டு பிகாரில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கடசி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.