வக்ஃப் வாரியத்துக்கு ரூ.10 கோடி நிதி உத்தரவை திரும்பப் பெற்றது மகாராஷ்டிர அரசு

வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கி வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக அந்த மாநில அரசு அறிவித்தது.
Updated on

மகாராஷ்டிரத்தில் மாநில வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கி வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுவதாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே அதனைத் திரும்பப் பெறுவதாக மாநில தலைமைச் செயலா் சுஜாதா சௌனிக் அறிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் எதிா்ப்பை தொடா்ந்து இந்த நிதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தில் வக்ஃப் இடம் பெறவில்லை என்பதால் நீதி ஒதுக்காததற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘2024-25 நிதியாண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ.2 கோடி சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள மாநில வக்ஃப் வாரியத்தின் தலைமையகத்துக்கு அளிக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன.

வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்தல் உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. முஸ்லிம்களின் சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com