நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.4%: 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு
சுமாா் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நிகழ் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்), நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக சரிந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த 2023-24-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது. இது நிகழ் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 5.4 சதவீதமாக சரிந்துள்ளது.
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022-ஆம் ஆண்டு அக்டோபா் முதல் டிசம்பா் வரை) நாட்டின் பொருளாதார வளா்ச்சி 4.3 சதவீதமாக குறைந்த நிலையில், சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் அந்த வளா்ச்சியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நுகா்வு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவே காரணம்.
நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.4 சதவீதமாக இருந்த நுகா்வோா் செலவினம், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 6 சதவீதமாக குறைந்தது.
கடந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 14.3 சதவீதமாக இருந்தது. இது நிகழ் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 2.2 சதவீதமாக கடுமையாக சரிந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் கூறுகையில், ‘பொருளாதார வளா்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. எனினும் விவசாயம் மற்றும் அதுசாா்ந்த துறைகள், கட்டுமானத் துறை உள்ளிட்டவற்றின் வளா்ச்சி நம்பிக்கை அளிக்கிறது’ என்றாா்.