ஹரியாணாவில் பிரசாரம் செய்வதற்காக சிறையிலிருந்து ராம் ரஹீம், கேஜரிவால் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட்,
தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சிறையிலிருந்து தேர்தல் பிரசாரத்திற்கு வெளியே வந்ததற்குப் பின்னணியில் பாஜக இருப்பதாக ராபர்ட் வத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியாணா தேர்தலில் காங்கிரஸின் வாய்ப்பைப் பறிக்கும் நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகின்றது. கொலை, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ள பாபா ராம் ரஹீமை தேர்தலுக்கு சரியாக 20 நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதேபோன்று கேஜரிவால் சிறையிலிருந்து சரியான நேரத்தில் ஜாமீன் கிடைத்து வெளியே வந்திருக்கிறார். இவை பாஜகவின் திட்டமிட்ட செயல் என்று அவர் கூறியுள்ளார். மாநிலத்தில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை இவர்களால் முறியடிக்க முடியும் என்று பாஜக நினைக்கிறது.
தொழிலதிபரான ராபர்ட் வதேரா தான் கையாளும் நிறுவனத்தின் மூலம் மாநிலத்தில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கலாம், ஆனால் பாஜக அனைவரையும் மிரட்டி வெளியேறச் செய்தது. பொருளாதார ரீதியாக அவர்கள் என்னை அழிக்க முயன்றனர் என்றார்.
ஹரியானாவில் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிப்பார்கள், இந்த தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்று ராபர்ட் வத்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.