பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல்... ஓலா நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஓலா நிறுவனத்தின் கார் ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க ஓலா நிறுவனத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

ஓலா நிறுவன கார் ஓட்டுநரால் கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஓலா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்னைகளில் ஓலா நிறுவனத்தின் சர்வதேச புகார்கள் குழுவிற்கு வரும் புகார்களுக்கு, பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013-ன் (போஷ் சட்டம்) கீழ் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிபதி எம்ஜிஎஸ் கமல் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற வழக்குகளில் 90 நாள்களில் விசாரணையை முடித்து மாவட்ட அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரரின் வழக்கு நடத்தியச் செலவுகளுக்கு ஈடுகட்ட ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ. 50,000 வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ் அனைத்து தரப்பினரும் இணங்கி, சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டும் எனக்கூறி கடந்த ஆகஸ்ட் 20 அன்று நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மனுதாரர் முதலில் ஓலா நிறுவனத்தில் தனது புகாரைத் தெரிவித்துள்ளார். ஆனால், நிறுவனத்தின் புகார் குழு வெளிப்புற சட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பின்பற்றி அது தங்களின் அதிகார வரம்புக்குள் இல்லை என்று விசாரணைக்கு மறுத்துவிட்டனர்.

பிறகு உயர் நீதிமன்றத்திடம் புகாரை எடுத்துச் சென்ற அந்தப் பெண், ஓலா நிறுவனம் தனது புகாரை ஆய்வு செய்யவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் போஷ் சட்டத்தின் வழிகாட்டுதல்களை நிறுவனம் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துமாறும் அவர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில் ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் தொடர்பாக 90 நாள்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக சாலை போக்குவரத்துப் பாதுகாப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிக்க மறுத்த மாநில அரசுக்கு நீதிமன்றம் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதித்தது.

வழக்கு விசாரணையின் போது, ​​மனுதாரரின் வக்கீல், ஓலா வெறும் தளமாக மட்டுமல்லாமல் ஒரு போக்குவரத்து நிறுவனமாக செயல்படுகிறது. அதன் ஓட்டுநர்களின் செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிட்டார்.

ஆனால், ஓலா நிறுவனம் சார்பாக ஆஜரான வக்கீல் பேசுகையில் ஓட்டுநர்கள் சுயாதீன முறையில் ஒப்பந்தக்காரர்களாக வேலை பார்ப்பதாகவும், அவர்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்ல என்பதால் தொழிலாளர் சட்டங்களின் கீழ் நிறுவனம் அவர்களின் தவறுகளுக்குப் பொறுப்பேற்கக்கூடாது என்றும் வாதிட்டார்.

இந்த நிலையில் ஓலா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் நேற்று (செப். 30) உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com