
நாடு முழுவதுமிருந்து 2024ஆம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை திங்கள்கிழமையன்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த பருவமழைக் காலத்தில் நாடு முழுவதும் 934.8 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
தென்மேற்குப் பருவமழையின் சராசரி அளவு 108 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகப்படியான மழையளவாகவும் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்கள் 19 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவை பெற்றுள்ளன. தென்னிந்திய மாநிலங்கள் வழக்கத்தை விட 14 சதவீதம் கூடுதல் மழையைப் பெற்றுள்ளன. வடமேற்கு மாநிலங்கள்தான் 7 சதவீதம் கூடுதல் மழைப் பெற்றுள்ளன.
ஆனால், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வழக்கத்தை விடவும் குறைவான மழையைப் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 11 சதவீதம் மழைப் பற்றாக்குறை இருந்த நிலையில், ஜூலையில் இது 9 சதவீதம் அதிகப்படியான மழையாக மாறியிருந்தது.
நாடு முழுவதும் 36 வானிலை ஆய்வு துணை மண்டலங்கள் அமைந்துள்ளன. இதில், 21 துணை மண்டலங்களில் வழக்கமான மழைப் பொழிவு பதிவாகியிருக்கிறது. 10 இடங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இரண்டு மண்டலங்களில்தான் குறைவான மழை பதிவாகியிருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு பருவமழைக் காலத்தில், நாட்டில் 820 மி.மீ. மழை பதிவானது. அந்த ஆண்டில் 94.4 சதவீத நீண்ட காலம் நீடித்த மழைக்காலத்தில் மழையின் சராசரி 868.6 மி.மீ. ஆகவே இருந்தது.
நாட்டின் முக்கிய தொழிலான வேளாண்மையில், 52 சதவீத வேளாண் பரப்பு பருவமழையை நம்பியே உள்ளது. தென்மேற்குப் பருவமழை என்பது, கோடைக் காலத்தை அடுத்து வருவதால், இதுதான் நாட்டு மக்களின் மிக முக்கிய காலத்தில் தண்ணீர் தந்து, வறண்டிருக்கும் நீர்நிலைகளில் நீரை சேமிக்க உதவுகிறது என்பதால், தென்மேற்குப் பருவமழை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.