ராம்தாஸ் அதாவலே
ராம்தாஸ் அதாவலே

மகாராஷ்டிரத்தில் 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்- பாஜகவுக்கு மத்திய இணையமைச்சா் அதாவலே கோரிக்கை

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் இந்திய குடியரசுக் கட்சிக்கு (ஏ) 8 முதல் 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்று பாஜக தலைவா்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அக்கட்சித் தலைவரும், மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளாா்.
Published on

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் இந்திய குடியரசுக் கட்சிக்கு (ஏ) 8 முதல் 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்று பாஜக தலைவா்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அக்கட்சித் தலைவரும், மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக - முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிரணியில் (மகாராஷ்டிர விகாஸ் அகாடி) உள்ளன.

மகாராஷ்டிரத்தில் 288 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான ராம்தாஸ் அதாவலே பாஜக கூட்டணியில் இடம் பெற்று மத்திய அமைச்சராக இருந்தாலும், அக்கட்சிக்கு மக்களவை, மகாராஷ்டிர பேரவையில் உறுப்பினா்கள் இல்லை. ராம்தாஸ் அதாவலே மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா்.

இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், ‘மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் ஆளும் கூட்டணியில் எங்கள் கட்சி உள்ளது. மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.

பேரவைத் தோ்தலில் எங்கள் கட்சிக்கு 8 முதல் 10 தொகுதிகள் ஒதுக்க பாஜக மேலிடப் பொறுப்பாளா்களிடம் கோரியுள்ளோம். மாநிலம் முமுவதும் பரவலாக போட்டியிட்டு கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எங்கள் கட்சிக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. முக்கியமாக தலித் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com