தேசியத் தலைநகர் தில்லியில் மொத்தம் ரூ.5,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான கோகைன், கஞ்சா ஆகிய போதைப் பொருள்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லியில் இதுவரை இல்லாத அளவில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. இது தொடர்பாக, தில்லியைச் சேர்ந்த துஷார் கோயல் (40), ஹிமான்ஷு குமார் (27), ஒளரங்கசீப் சித்திக் (23), மும்பையைச் சேர்ந்த பாரத் குமார் ஜெயின் (48) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தில்லி காவல் துறை கூடுதல் ஆணையர் (சிறப்புப் பிரிவு) பி.எஸ்.குஷ்வா கூறியதாவது: வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்த கோயல், சர்வதேச போதைப் பொருள் கும்பல்களிடம் போதைப் பொருளை வாங்கி, இந்தியா முழுவதும் விநியோகித்து வந்துள்ளார். இதர மூவரும் அவரது கூட்டாளிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.
கோயலிடம் இருந்து கோகைன் போதைப் பொருளை வாங்குவதற்காக, மஹிபால்பூர் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு கடந்த அக்.1-ஆம் தேதி ஜெயின் வந்தார். இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் அங்கு பதுங்கியிருந்த காவல் துறையினர், கோயல் உள்பட 4 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். சேமிப்புக் கிடங்கில் இருந்த பெட்டிகளில் 560 கிலோ கோகைன், 40 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் தோராயமான சர்வதேச மதிப்பு ரூ.5,620 கோடியாகும்.
தாய்லாந்தில் இருந்து கஞ்சாவும், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து கோகைன் போதைப் பொருளும் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோயலுக்கு துபை மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள கும்பலுடன் தொடர்புள்ளது. இது தொடர்பாக விரிவாக விசாரணை நடைபெற்று வருகிறது.
காவல் துறையின் சிறப்பு பிரிவினர் சுமார் 2 மாதங்களாக கண்காணித்து, இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். கைதான கோயல், பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த 2003-ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர் என்று அவர் தெரிவித்தார்.