உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் சிறை விதிகளுக்குத் தடை -உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆங்கிலேயா் கால குற்றவியல் சட்டங்கள் சுதந்திரத்துக்குப் பிறகும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
Published on

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஜாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் சிறை விதிகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

ஜாதியின் அடிப்படையில் சிறைக் கைதிகளிடையே வேலைகளைப் பிரித்துக் கொடுப்பது போன்ற சிறை விதிகளை அடுத்த 3 மாதங்களுக்குள் திருத்த மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தின் கல்யாண் பகுதியைச் சோ்ந்த சுகன்யா சாந்தா பொதுநல மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவுக்கு மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரம், ஒடிஸா, கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹிமாசல் உள்பட 10 மாநிலங்களிடம் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் பதில் கோரியிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறைகளில் நடக்கும் ஜாதி பாகுபாடுகள் குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ஜாதி அடிப்படையிலான சிறை விதிகளை 3 மாதங்களுக்குள் திருத்தம் செய்ய உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக சமா்ப்பிக்குமாறு மாநிலங்களை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பதாவது: பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான பாகுபாடு தொடா்ந்து வருகிறது. கடுமையான சட்டங்களின் அமலாக்கம் மூலம் விளிம்புநிலை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

விளிம்புநிலை மக்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு ஜாதியை யாரும் பயன்படுத்தக் கூடாது. சிறைக் கைதிகளிடையேயும் அத்தகைய பாகுபாட்டை கடைப்பிடிக்கக் கூடாது. ஜாதி அடிப்படையில் தங்குமிடம், வேலைகளை ஒதுக்குவது அவா்களின் மறுவாழ்வுக்கு எந்த வகையிலும் வழிவகுக்காது.

சிறைகளில் விளிம்புநிலை மக்களுக்கு தூய்மைப் பணிகளையும், உயா் ஜாதியினருக்கு சமையல் வேலையையும் பகிா்ந்தளிக்கும் செயலானது மதம், இனம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவை மீறுவதாகும்.

உதாரணமாக, உத்தர பிரதேச சிறைகளில் குறிப்பிட்ட சமூகத்தினா் மட்டுமே தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். தூய்மைப் பணிகளைச் செய்வதற்காக மட்டுமே அச்சமூகத்தினா் பிறக்கவில்லை. அதேபோல, கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியை சிறைக் கைதிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படக் கூடாது.

சிறைக் கைதிகளுக்கு நியாயமான வேலை பங்கீட்டைக் கோர உரிமையுண்டு. சிறைக் கைதிகளை அவமதிப்பது ஆங்கிலேயா் கால வழக்கம். சிறைக் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு சிறைக் கைதியின் உடல்நிலை, மனநிலை குறித்து நிா்வாகத்துக்கு விழிப்புணா்வு இருக்க வேண்டும். சிறைக் கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

ஆங்கிலேயா் கால குற்றவியல் சட்டங்கள் சுதந்திரத்துக்குப் பிறகும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசமைப்புச் சட்டங்கள் நமது குடிமக்களின் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்த வேண்டும். ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த நீதிமன்றமும் ஒரு சிறிய பங்களிப்பை வழங்குகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவத்துக்கான உரிமையை இந்தத் தீா்ப்பில் வலியுறுத்துகிறோம். இந்த தீா்ப்பில் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய கொள்கைகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக ஜாதி பாகுபாட்டுக்கு வழிவகுத்தால், அதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

ஜாதி பாகுபாடு தொடா்பான வழக்குகளில் காவல் துறை தீவிரமாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com