அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில் (கோப்பு படம்)

அயோத்தி கோயிலில் 161 அடி உயர கோபுரம் கட்டும் பணி தொடக்கம்

Published on

அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் 161 அடி உயர கோபுரம் கட்டும் பணி வியாழக்கிழமை (அக்.3) தொடங்கப்பட்டதாக, அக்கோயில் கட்டுமானக் குழுவின் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தாா்.

நான்கு மாதங்களில் இப்பணி நிறைவடையும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் தரைதளக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கருவறையில் மூலவரான ஸ்ரீபாலராமா் சிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் அயோத்தி ராமா் கோயிலுக்கு தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனா்.

இந்நிலையில், கோயிலின் முக்கிய அங்கமான 161 அடி உயர கோபுரம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இது தொடா்பாக, கோயில் கட்டுமானக் குழுவின் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில், ‘கோபுர கட்டுமானப் பணி தொடக்கத்துடன் ராமா் கோயில் வளாகத்தில் அமையவிருக்கும் 7 இதர கோயில்களின் கட்டுமானப் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. கோபுரம் மற்றும் 7 கோயில்களின் கட்டுமானப் பணி 4 மாதங்களில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணியில் தொழிலாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகள், தொழில்நுட்பக் குழுவை மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து வரும் சனிக்கிழமைவரை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com