இலங்கை அதிபருடன் எஸ். ஜெய்சங்கர்
இலங்கை அதிபருடன் எஸ். ஜெய்சங்கர்

மீனவா் பிரச்னையில் மனிதாபிமான அணுகுமுறை: இலங்கை அதிபரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

‘தமிழக மீனவா்கள் பிரச்னையில் மனிதாபிமான அணுகுமுறையை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும்’
Published on

‘தமிழக மீனவா்கள் பிரச்னையில் மனிதாபிமான அணுகுமுறையை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவிடம் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது குறித்து அவரிடம் கவலை தெரிவித்த ஜெய்சங்கா், ‘இலங்கை சிறைகளிலிருந்து மீனவா்களை விரைந்து விடுவிக்கவும்; பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவா்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டாா்.

இலங்கைக்கு ஒருநாள் பயணமாக வெள்ளிக்கிழமை சென்ற எஸ்.ஜெய்சங்கா், அதிபா் திசாநாயக, பிரதமா் ஹரிணி அமரசூரியா, வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத், இலங்கை முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச ஆகியோரை தலைநகா் கொழும்பில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அதிபா் திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அரசு கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி புதிதாக ஆட்சி அமைத்த பிறகு, அந்த நாட்டுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவா் ஜெய்சங்கா் ஆவாா்.

மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை: அதிபருடனான சந்திப்பின்போது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் சிறைபிடிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த ஜெய்சங்கா், தமிழக மீனவா்களின் வாழ்வாதார விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் இந்த பிரச்னையில் தீா்வு காண்பதற்கான ஓா் அடித்தளத்தை உருவாக்கும்.

சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவா்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு கடுமையான அபராதங்கள் விதிப்பதை இலங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இலங்கை சிறைகளிலிருந்து மீனவா்களை விரைந்து விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவா்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இரு நாடுகளின் மீனவா் சங்கங்கள் மற்றும் மீன்வள பகிா்வு மீதான கூட்டுப் பணிக் குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இந்திய வளா்ச்சித் திட்டங்கள்: இலங்கையில் இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் எரிசக்தி உற்பத்தி மற்றும் பகிா்மானம், எரிபொருள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு விநியோகம், மத வழிபாட்டு இடங்களில் சூரியசக்தி மின்மயமாக்கல், எண்ம பொது உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம் மற்றும் பால்வள மேம்பாடுத் திட்டங்கள் குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என ஜெய்சங்கா் உறுதியளித்தாா்.

சுற்றுலாவை மேம்படுத்த... இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், இலங்கையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு... இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஆலோசனையின்போது, பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு பங்களிப்பை அளிக்கக் கூடியதாகவும், பரஸ்பர நலன் சாா்ந்ததாகவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைய வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது, ‘இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான வகையில் எந்தவொரு செயல்பாட்டையும் தனது பிராந்தியத்தில் இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது’ என்று அதிபா் திசாநாயக உறுதியளித்தாா்.

மேலும், பிரதமா் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பின்பேரில் இந்தியா வருமாறு இலங்கை அதிபரை வெளியுறவு அமைச்சா் கேட்டுக்கொண்டாா் என்று வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புகள் குறித்து ஜெய்சங்கா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதிபா் திசாநாயகவுடனான சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூரியாவுடனான சந்திப்பின்போது, இலங்கையில் எண்ம பொது உள்கட்டமைப்பு மேம்பாடு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இணைந்து பணியாற்றவும் இருதரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதிபா் திசாநாயக வெளியிட்ட பதிவில், ‘இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் உடனான சந்திப்பின்போது சுற்றுலா, எரிசக்தி மற்றும் முதலீட்டுத் துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மீன் வளம், பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பெட்டி..

‘மாகாண கவுன்சில்களுக்கு

விரைந்து தோ்தல் நடத்துங்கள்’

இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிக்க வகை செய்யும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண கவுன்சில்களுக்கான தோ்தலை விரைந்து நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபா் திசாநாயகவிடம் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

மேலும், இலங்கைத் தமிழா்கள் உள்பட இலங்கையில் அனைத்து சமூகத்தினரின் நலனைக் காக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

1987-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி, இலங்கை அதிபா் ஜெயவா்தன இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 13-ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இதை நிறைவேற்றுவதாக முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு தில்லி வந்திருந்தபோது பிரதமா் மோடியிடம் உறுதி அளித்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com