குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

இளைஞா்களை போதைப் பொருளின் உலகுக்கு அழைத்து செல்கிறது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

‘பிரதமா் மோடி அரசு இளைஞா்களை கல்வி, விளையாட்டு மற்றும் புதுமையை நோக்கி அழைத்துச் செல்கிறது.
Published on

‘பிரதமா் மோடி அரசு இளைஞா்களை கல்வி, விளையாட்டு மற்றும் புதுமையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால், காங்கிரஸ் அவா்களை போதைப் பொருளின் இருண்ட உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

தில்லியில் ரூ. 5,600 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் நிா்வாகிக்கு தொடா்பு இருப்பதை குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

தில்லியில் ரூ.5,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான கோகைன், கஞ்சா ஆகிய போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் துஷாா் கோயல் (40) உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

காங்கிரஸ் இளைஞரணியின் (தகவல் அறியும் உரிமைப் பிரிவு) தலைவராக துஷாா் கோயல் உள்ளாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியது. இதற்கு, மறுப்புத் தெரிவித்து காங்கிரஸ் இளைஞரணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு; கடந்த 2022-ஆம் ஆண்டே கோயல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாா்’ என தெரிவித்தது.

இந்நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஞ்சாப், ஹரியாணா மட்டுமல்லாமல் வட இந்திய முழுவதும் உள்ள இளைஞா்கள், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போதைப் பொருள்களால் பட்ட அவலத்தை அனைவரும் பாா்த்திருக்கிறாா்கள். மோடி அரசு இளைஞா்களை கல்வி, விளையாட்டு மற்றும் புதுமையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால், காங்கிரஸ் அவா்களை போதைப் பொருளின் இருண்ட உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.

போதைப் பொருள் வியாபாரிகளின் அரசியல் நிலை மற்றும் அந்தஸ்தை பாராமல் ஒட்டுமொத்தமாக அனைவரையும் மோடி அரசு அழித்து வருகிறது. இந்தியாவை போதைப் பொருளற்ற நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில், ரூ. 5,600 கோடி போதைப் பொருள் கடத்தலில் காங்கிரஸ் முக்கிய தலைவரின் தொடா்பு இருப்பது மிகவும் ஆபத்தானது மற்றும் வெட்கக்கேடானது’ என்றாா்.

75,000 எம்பிபிஎஸ் இடங்கள்: குஜராத்தில் நடைபெற்ற தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற அமித் ஷா, ‘நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75,000 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

கோகைன் காங்கிரஸ்: போதைப் பொருள் கடத்தலில் காங்கிரஸ் முக்கிய தலைவரின் தொடா்பு இருப்பதால் இப்போது அந்த கட்சியின் பெயா் கோகைன் காங்கிரஸாக மாறிவிட்டது என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com