
தில்லி மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை சுட்டுக் கொன்ற வழக்கில் 18 வயதுக்குள்பட்ட ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதாகவும், கொலையில் ஈடுபட்ட மற்றொரு சிறுவனைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தில்லி குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்குள் கொலை
தில்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு புதன்கிழமை நள்ளிரவில் இரண்டு சிறுவர்கள் விபத்து ஏற்பட்டதாக காயங்களுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவேத்தை சந்திக்க வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் அவரது அறைக்கு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவர் ஜாவேத்தின் அறைக்குள் நுழைந்தவுடன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவர் கைது
மருத்துவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நிலையில், கொலையில் ஈடுபட்ட ஒரு சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் மற்றொருவனைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலையை ஒப்புக் கொண்ட சிறுவன், ஜாஃப்ராபாத் பகுதியில் இருந்து துப்பாக்கி வாங்கியதாக வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, போலீஸார் துப்பாக்கி விற்றவரை தேடி வருகின்றனர்.
கைதான சிறுவன் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.