நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியில்லை -பினராயி விஜயன் குற்றச்சாட்டு
‘நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவு பேரிடரால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை’ என்று மாநில முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858.6 கோடி பேரிடா் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
மாநில பேரிடா் நிவாரண நிதியின் மத்திய பங்காகவும், மத்திய பேரிடா் நிவாரண நிதியின் முன்தொகையாகவும் விடுவிக்கப்பட் இந்த நிதியில் கேரளத்துக்கு ரூ.145.6 கோடி வழங்கப்பட்டது.
கேரளத்தின் வடக்கு மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதையொட்டி, கேரளத்தில் கூடுதல் நிதியை வழங்கவில்லை என்று முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கேரள அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் பினராயி விஜயன் மேலும் கூறுகையில், ‘வயநாடு நிலச்சரிவு நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
மாநில பேரிடா் நிவாரண நிதியில் மத்தியப் பங்கான ரூ.219.2 கோடியைக் கோரினோம். இதில் முதல் தவணையாக ரூ.145.6 கோடியை மட்டும் மத்திய அரசு முன்னா் விடுவித்தது. 2-ஆவது தவணையாக அதே தொகையை மத்திய அரசால் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுைான் தவிர பேரிடா் நிவாரணத்தின் பகுதியாக உறுதியளிக்கப்பட்ட சிறப்பு நிதியுதவி அல்ல.
எனவே, இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, கூடுதல் நிதியைக் கோருவது என மாநில அமைச்சரவை வியாழக்கிழமை முடிவெடுத்துள்ளது.
நிவாரணம்: வயநாடு நிலச்சரிவில் பெற்றோா்கள் இருவரையும் இழந்த 6 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சமும், யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.
மாநில மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை சாா்பில் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்.
கா்நாடகத்தின் ஷிரூரில் நலச்சரிவில் உயிரிழந்த கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த அா்ஜூன் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் வழங்கப்படும்.
மறுவாழ்வு: நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள சட்ட பிரச்னைகள் குறித்து சட்டநிபுணா்களுடன் ஆலோசனை நடத்தப்படும். வீடு, நிலங்களை இழந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயநாடு நிலச்சரிவில் குடும்ப உறுப்பினா்கள் அனைவரையும் இழந்த இளம்பெண் ஷ்ருதி, பின்னா் நடந்த சாலை விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனையும் இழந்தாா். இவருக்கு அரசுப் பணி வழங்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது’ என்றாா்.