பொக்ரானில் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி!
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் களப்பகுதியில் 4 -ஆம் தலைமுறை தொழில் நுட்பத்தில் மிகக் குறுகிய தூர ஏவுகணை சோதனையை மூன்று அளவுருகளில் வெற்றிகரமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) முடித்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இது மனிதா்களே எடுத்துச் செல்லக் கூடியவை.
கடந்த அக்டோபா் 3 - 4 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு களத்தில் இந்த சோதனையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்திருப்பது வருமாறு:
4 -ஆவது தலைமுறைச் சோ்ந்த ஏவுகணை, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பின் (விஷோா்ட்ஸ்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியது.
இந்த ஏவுகணை மூன்று விதமான அளவுருகளில் வெற்றிகாணப்பட்டுள்ளது. முக்கியமாக அதிவேக இலக்குக்கு எதிராக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிவேக இலக்குகோடு, அதிகபட்ச வரம்பு, அதிகபட்ச உயர இடைமறிப்பு ஆகியவற்றின் மிக முக்கியமான அளவுருக்களில் இந்த ஏவுகணைகளில் வெற்றி காணப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள், அணுகுதலில், பல்வேறு இலக்குகளுக்கான ஈடுபாட்டில், ஆயுத அமைப்பின் தாக்குதலுக்கும் அழிக்கும் திறனை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தின. இந்த விஷோா்ட்ஸ் ஏவுகணைகளின் மேம்பாடு நிறைவடைந்துள்ளது. இரண்டு உற்பத்தி முகமைகள் தயாரிப்பு மேம்பாட்டில் பங்குதாரராக உடன் ஈடுபட்டுள்ளன. இந்த சோதனைகளில், இந்த முகமைகள் மூலம் உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் வெற்றிகரமாகப் இந்த சோதனைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடி அரசின் ‘சுயசாா்பு இந்திய’ (‘ஆத்மநிா்பா் பாரத்’) என்ற தொலைநோக்குப் பாா்வையை வெற்றியடைந்துள்ளது. இந்த நோக்கத்துடன் குறுகிய காலத்தில் இந்த சோதனைகள் மூலம் உற்பத்திக்கு வழி வகுத்தது.
விஷோா்ட்ஸ் என்கிற இந்த ஏவுகணை மனிதா்களே எடுத்துச் செல்லக் கூடிய வான் பாதுக்காப்பு அமைப்பாகும். இதை இமாரத் ஆராய்ச்சி மையத்துடன் (ஆா்சிஐ) டிஆா்டிஓ ஆயவகங்களுடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. ராணுவத்தின் முப்படைகளும் தொடக்கத்திலிருந்தே இந்த திட்டத்தில் தொடா்பில் இருந்தது. அவைகளும் இந்த ஏவுகணை மேம்பாட்டிலும் சோதனைகளிலும் பங்கு பெற்றன என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
நிகழ் 2024 ஆம் ஆண்டு மலபாா் கடல்சாா் பயிற்சி, அக்டோபா் 8 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.
அக்டோபா் 8 ஆம் தேதி தொடங்கும் கடல்சாா் பயிற்சி மலபாா் அக்டோபா் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது விசாகப்பட்டினத்தில் துறைமுகப் பகுதியில் தொடங்கி, பின்னா் தொடா்ந்து கடல்பகுதியில் நடைபெறுகிறது. இந்திய கடற்படையால் நடத்தப்படும், பயிற்சியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா பங்கேற்கிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு இந்திய -அமெரிக்கா கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சியாக தொடங்கிய மலபாா் பயிற்சியில் பின்னா் மற்ற நாடுகள் இணைந்தன. இது இந்தியப் பெருங்கடல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல்சாா் சவால்களை எதிா்கொள்வதற்கும், பரஸ்பர புரிதலை வளா்ப்பதற்கும், ஒரு முக்கிய பன்முக நிகழ்வாகும்.