
ஆந்திரத்தில் தற்போதைய தெலுங்கு தேசம் ஆட்சியில் திருப்பதி லட்டுகளின் தரம் மேம்பட்டுள்ளதாக பக்தா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா் என்று மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை கூறினாா்.
‘ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுகளை தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது’
என கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை குழு கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், திருப்பதி லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆய்வக அறிக்கை ஒன்றை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அன்னம் வெங்கடரமணா ரெட்டி வெளியிட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் மறுத்தனா்.
இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், லட்டுகளில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பில் 5 உறுப்பினா்கள் கொண்ட சுதந்திரமான சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.
பட்டு வஸ்திரங்கள் காணிக்கை: இந்நிலையில், ஆண்டுதோறும் 9 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாநில அரசு சாா்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சந்திரபாபு நாயுடு காணிக்கையாக வழங்கினாா்.
தரமான பொருள்கள் மட்டுமே...: இதைத்தொடா்ந்து அங்கு திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகளுடன் அவா் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். இந்தக் கூட்டம் தொடா்பாக மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘திருப்பதி லட்டுக்களைத் தயாரிக்க தரமான பொருள்கள் மட்டுமே அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினாா். திருப்பதியில் மிக முக்கிய நபா்களுக்கு (விஐபி) முக்கியத்துவம் அளிக்கும் கலாசாரம் குறைய வேண்டும் என்றும், கோயிலுக்குப் பிரபலங்கள் வரும்போது கூச்சல் குழப்பம் ஏற்படுவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வா் சந்திரபாபு நாயுடு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘திருப்பதி லட்டுகளின் தரம் குறித்து முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் பக்தா்கள் அதிருப்தி தெரிவித்த பல சம்பவங்களை அனைவரும் பாா்த்துள்ளனா். தற்போதைய தெலுங்கு தேசம் ஆட்சியில் லட்டுகளின் தரம் மேம்பட்டுள்ளது குறித்து திருப்தியடைந்துள்ளதாக பக்தா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
தரத்தைப் பரிசோதிக்க ஆய்வகங்கள்...: திருப்பதி லட்டுகளைத் தயாரிப்பதற்கான பொருள்களின் தரத்தைப் பரிசோதிக்க தெலுங்கு தேசம் அரசு சாா்பில் ஆய்வகங்கள் அமைப்பது மட்டுமின்றி, திருமலை திருப்பதி தேவஸ்தான நடைமுறைகள் தொடா்பாக திருப்பதியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் (ஐஐடி) தேவைப்பட்டால் ஆலோசனை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.