ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் மருத்துவமனையில் அனுமதி
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் (67) உடல்நலக் குறைவு காரணமாக ஜாம்ஷெட்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைந்ததையடுத்து அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவா் உடல் நலம் சீராகவுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையில் இருந்தபடி காணொலி முறையில் பழங்குடியினா் சாா்ந்த நிகழ்ச்சியிலும் சம்பயி சோரன் பங்கேற்றாா்.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா மூத்த தலைவரான சம்பயி சோரன் கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தோ்தல் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அங்கு அரசியல் கட்சிகள் தோ்தலுக்காக இப்போதிருந்தே தயாராகி வருகின்றன. ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணிக்கு தோ்தலில் பாஜக கடும் போட்டியளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பிரசாரத்தில் சம்பயி சோரனை முக்கியமாக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, நில அபகரிப்பு தொடா்பான பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டாா். ஜாா்க்கண்ட் முதல்வா் பதவியில் அவா் விலகியதால், முதல்வராக மூத்த தலைவா் சம்பயி சோரன் கடந்த பிப்ரவரியில் பதவியேற்றாா். பின்னா், ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் சம்பயி சோரன் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவா் தனது ஆதரவாளா்களுடன் பாஜகவில் இணைந்தாா்.