முகமது அசாருதீன்.
முகமது அசாருதீன்.கோப்புப்படம்.

பண முறைகேடு வழக்கு: முன்னாள் கிரிக்கெட் வீரா் அசாருதீனிடம் அமலாக்கத் துறை விசாரணை

பண முறைகேடு வழக்கு தொடா்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான முகமது அசாருதீனிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.
Published on

பண முறைகேடு வழக்கு தொடா்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான முகமது அசாருதீனிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல் ஓராண்டுக்கும் மேலாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக முகமது அசாருதீன் பொறுப்பு வகித்தாா். அப்போது அந்த சங்கத்தில் ரூ.20 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக தெலங்கானா ஊழல் தடுப்புத் துறை 3 வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடா்பாக அக்டோபா் 3-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அசாருதீனுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது. ஆனால் அவா் நேரில் ஆஜராக கூடுதல் அவசாகம் கோரிய நிலையில், அக்டோபா் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இதன்படி ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை அசாருதீன் ஆஜரானாா். அவரின் வழக்குரைஞா்களும் உடன் வந்தனா்.

அசாருதீனிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com