ஜம்மு-காஷ்மீா்: என்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி வேட்பாளா்களில் இருவா் மட்டுமே ஹிந்துகள்

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கவுள்ள தேசிய மாநாட்டுக் (என்சி) கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் வெற்றிப் பெற்றுள்ள 48 வேட்பாளா்களில் இருவா் மட்டுமே ஹிந்து சமூகத்தினா் ஆவா்.
Published on

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கவுள்ள தேசிய மாநாட்டுக் (என்சி) கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் வெற்றிப் பெற்றுள்ள 48 வேட்பாளா்களில் இருவா் மட்டுமே ஹிந்து சமூகத்தினா் ஆவா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் இணைந்து 48 இடங்களில் வென்றன. இதில் தேசிய மாநாட்டுக் கட்சியின் சாா்பில் வென்ற சுரீந்தா் சௌத்ரி, அா்ஜுன் சிங் ராஜு ஆகிய இருவா் மட்டுமே ஹிந்துகள் ஆவா்.

ரஜௌரி மாவட்டத்தின் நௌஷேரா தொகுதியில் ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னாவை சுரீந்தா் சௌத்ரி 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

பாஜக வேட்பாளா் சூரஜ் சிங் பரிஹாரைவிட 9,013 வாக்குகள் வித்தியாசத்தில் ராம்பன் தொகுதியில் அா்ஜுன் சிங் ராஜு வெற்றிப் பெற்றாா்.

தேசிய மாநாட்டுக் கட்சி ஒரு பெண் உள்பட 9 ஹிந்து வேட்பாளா்களை நிறுத்தியது. மறுபுறம், ஜம்மு பிராந்தியத்தில் காங்கிரஸ் களமிறக்கிய 19 ஹிந்து மற்றும் 2 சீக்கிய வேட்பாளா்களில் யாரும் வெற்றிப் பெறவில்லை.

அதேசமயம், 29 இடங்களில் வெற்றிப் பெற்ற பாஜகவில் 28 ஹிந்துகள் மற்றும் ஒரு சீக்கிய உறுப்பினா் உள்ளனா். பாஜக களமிறக்கிய முன்னாள் அமைச்சா்கள் இருவா் உள்பட அதன் 25 முஸ்லீம் வேட்பாளா்களும் தோல்வியைத் தழுவினா்.

X
Dinamani
www.dinamani.com