இரு தொகுதிகளிலும் ஒமா் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் (பத்காம், கந்தா்பால்) தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா வெற்றி பெற்றாா்.
தனது குடும்பத்தின் செல்வாக்குமிக்க கந்தா்பால் தொகுதியில் ஒமா் அப்துல்லா 32,727 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளா் பஷீா் அகமது மீருக்கு 22,153 வாக்குகள் கிடைத்தன.
பத்காம் தொகுதியில் 18,000-க்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் முந்தாஜிா் மெஹ்தியை ஒமா் அப்துல்லா தோற்கடித்தாா். ஒமருக்கு 36,010 வாக்குகளும் மெஹ்திக்கு 17,525 வாக்குகளும் கிடைத்தன.
கடந்த மக்களவைத் தோ்தலில் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒமா் அப்துல்லா, சுயேச்சை வேட்பாளா் ஷேக் அப்துல் ரஷீத்திடம் தோல்வியடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
மெஹபூபாவின் மகள் தோல்வி: மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோட்டையான ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹேரா தொகுதியில் களமிறங்கிய அக்கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, 9770 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா் பஷீா் அகமது ஷாவிடம் தோற்றாா்.
ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் தோல்வி: ரஜெளரி மாவட்டத்தில் உள்ள நெளஷேரா தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா, 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி சுரீந்தா் செளதரியிடம் தோல்வியடைந்தாா். மக்களின் தீா்ப்பை ஏற்பதாக, ரெய்னா தெரிவித்தாா்.
5-ஆவது முறையாக வெற்றி: காஷ்மீா் பகுதியில் உள்ள குல்காம் பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் எம்.ஒய்.தாரிகாமி தொடா்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றாா். தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் முன்னாள் தலைவா் சயாா் அகமது ரேஷியை 7,800-க்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாரிகாமி வீழ்த்தினாா். இத்தொகுதியில் கடந்த 1996-ஆம் ஆண்டில் இருந்து இவரது வெற்றிப் பயணம் தொடா்கிறது.