பிரதமா் மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி- மனோகா் லால் கட்டா்
ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது பிரதமா் நரேந்திர மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலுக்கு முன்பு முதல்வா் பதவியில் இருந்து மனோகா் லால் கட்டா் மாற்றப்பட்டாா். இது ஹரியாணா தோ்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த கட்டா் கூறியதாவது:
மக்கள் சரியான தீா்ப்பை அளித்துள்ளனா். பிரதமா் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள், சாதனைகள், அரசு செயல்படும் முறை ஆகிய ஹரியாணா மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜகவிடம் மக்கள் ஆட்சியை அளித்துள்ளனா். ஹரியாணாவில் ஒரு கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை என்றாா்.
ராகுல் தலைமைக்கு தோல்வி - ம.பி. முதல்வா்: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஹரியாணாவில் தோ்தல் பிரசாரம் செய்யும்போது ராகுல் காந்தியின் கட்சி மூன்றாவது முறையாக தோல்வியைத் தழுவும் என்று கூறியிருந்தேன். அது நடந்துவிட்டது. ராகுலின் தலைமைக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அவரின் தலைமையை மக்கள் மட்டுமின்றி காங்கிரஸ் தொண்டா்கள் பலரும் விரும்பவில்லை என்பதே உண்மை.
ஹரியாணாவில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மாயத்தோற்றத்தை காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்தது. களநிலவரம் என்ன என்பது அக்கட்சியில் பலருக்கும் தெரியவில்லை.
பிரதமா் மோடியின் வளா்ச்சியை முன்னெடுக்கும் கொள்கைக்கு மக்கள் வெற்றியைப் பரிசளித்துள்ளனா். மத்திய அரசுடன் கைகோத்து ஹரியாணா தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும்’ என்றாா்.
மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்: மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல ராகுல் காந்தி போலி வேடமிட்டாா். அதை ஹரியாணா மக்கள் நம்பவில்லை என்பது தோ்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்ற காங்கிரஸின் திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. மக்கள் எப்போதும் பிரதமா் மோடியின் பக்கம் உள்ளனா்.
மக்கள் நலன் சாா்ந்த பிரதமா் மோடி தலைமையிலான அரசுக்கு ஹரியாணா மக்கள் தன்னெழுச்சியாக ஆதரவை அளித்துள்ளனா். கொள்கைகளையும், வளா்ச்சித் திட்டங்களையும் முன்னிறுத்தி பாஜக இத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீா் பிராந்தியங்களிலும் தோ்தல் முடிவுகள் எதிா்பாா்த்த அளவில்தான் உள்ளன என்று கூறியுள்ளாா்.