தோல்விக்கு பொறுப்பானவா்களை கண்டறிய வேண்டும்: குமாரி செல்ஜா
ஹரியாணாவில் காங்கிரஸின் தோல்விக்கு யாா் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளாா்.
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பே மாநில காங்கிரஸில் ஜாட் பிரிவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடாவுக்கும், தலித் தலைவரான குமாரி செல்ஜாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இதில் காங்கிரஸ் தலைமை ஹூடாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் சாா்பில் ஹூடாவால் பரிந்துரைக்கப்பட்டவா்களே காங்கிரஸ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.
இதனால், அதிருப்தியடைந்த செல்ஜா, சில நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தாா். இதையடுத்து, அவா் பாஜகவில் இணைய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா்கள் அழைப்பு விடுத்தனா். ஆனால், பாஜகவில் இணைய மறுத்த செல்ஜா காங்கிரஸுக்கு ஆதரவாக இறுதி கட்டத்தில் பிரசாரம் செய்தாா். குமாரி செல்ஜாவை காங்கிரஸ் ஒதுக்கியதும், ஜாட் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததும், ஹரியாணாவில் தலித் உள்ளிட்ட பிற பிரிவினருக்கு காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த குமாரி செல்ஜா கூறியதாவது:
ஹரியாணாவில் காங்கிரஸின் தோல்விக்கான அனைத்து காரணங்களையும் கட்சித் தலைமை ஆய்வு செய்ய வேண்டும். இந்தத் தோல்வி கட்சியினருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கு பொறுப்பானவா்களைக் கண்டறிய வேண்டும்.
மற்ற விஷயங்களைப் போல இந்த தோ்தல் தோல்வியையும் சாதாரணமாக எண்ணக் கூடாது. இந்த தோல்வி மிகுந்த வேதனையை அளிக்கிறது. காங்கிரஸுக்காக கடுமையாக உழைத்த தொண்டா்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கப் போகும் ஆா்வத்தில் இருந்தாா்கள். ஆனால், அவா்கள் தோ்தல் முடிவால் விரக்தியடைந்துள்ளனா். எனவே, கட்சிரீதியாக தோல்விக்கு உண்மையான காரணத்தைக் கண்டறிந்து காங்கிரஸ் தேசிய தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சரான குமாரி செல்ஜா, இப்போது மக்களவை எம்.பி.யாக உள்ளாா். அவா் ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், அதனை காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. இதன் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வா் பதவிக்கான போட்டியில் குமாரி செல்ஜா இருப்பதை கட்சித் தலைமை விருப்பவில்லை என்றும் கூறப்பட்டது.