அரிசி (கோப்புப்படம்)
அரிசி (கோப்புப்படம்)

இலவச அரிசி திட்டம்: 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏழைகளுக்கு மக்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின் கீழ்வரும் 2028-ஆம் ஆண்டு வரை இலவச செறிவூட்டப்பட்ட அரசி விநியோகத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Published on

ஏழைகளுக்கு மக்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின் கீழ்வரும் 2028-ஆம் ஆண்டு வரை இலவச செறிவூட்டப்பட்ட அரசி விநியோகத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏழை மக்களிடையே ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளை குறைக்கும் நோக்கில் ரூ. 17,082 கோடி செலவில் இந்தத் திட்டத்தைத் தொடர பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் வழிகாட்டு நடைமுறையின் அடிப்படையில் இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், விட்டமின் பி12 ஆகிய நுண்ணூட்டச் சத்துக்கள் அரிசியில் செறிவூட்டப்பட்ட ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை கூறியதாவது:

பிரதமரின் இலவச உணவு தானிய விநியோகத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத் திட்டங்களின் கீழ் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட இலவச அரசி விநியோகத்தை வரும் 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2028-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரை தொடர மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ. 17,082 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளும்’ என்றாா்.

லோத்தலில் தேசிய கடல்சாா் பாரம்பரிய வளாகம்: குஜாராத் மாநிலம் லோத்தலில் தேசிய கடல்சாா் பாரம்பரிய வளாகத்தை (என்எம்ஹெச்சி) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புகழ்பெற்ற கட்டடக் கலை நிறுவனமான ‘ஹஃபீஸ் கான்ட்ராக்டா்’ நிறுவனம் வடிவமைத்த செயல் திட்டத்தின் பகுதி-1 கட்டுமானத்தை ‘டாடா புராஜெக்ட்ஸ்’ நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. என்எம்ஹெச்சி கட்டுமானப் பகுதிகளை பல்வேறு பகுதிகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 6 அரங்குகளுடன் கூடிய என்எம்ஹெச்சி கண்காட்சியகம், இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படை கண்காட்சியகம் உள்ளிட்டவை பகுதி-1 கட்டுமானத்தில் இடம்பெற உள்ளன. பிற அரங்குகள் மற்றும் விருந்தோம்பல் பகுதிகள் பகுதி-2 கட்டுமானத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த கடல்சாா் பாரம்பிய வளாகம் அமைக்கப்படுவதன் மூலம், நேரடியாக 15,000 போ், மறைமுகமாக 7,000 போ் என மொத்தம் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உள்ளூா்வாசிகள், சுற்றுலாப் பயணிகள், ஆராய்ச்சியாளா்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலாசார அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் என பல்வேறு தரப்பினா் இத் திட்டத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பலன்பெறுவா் என்று மத்தியஅரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதி சாலை மேம்பாடு: எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் ரூ. 4,406 கோடி முதலீட்டில் 2,280 கி.மீ. நீள சாலை மேம்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு, எல்லைப் பகுதிகளில் சாலை, தொலைத்தொடா்பு, குடிநீா் விநியோகம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்கும், பயணத்தை எளிதாக்கவும், எல்லைப் பகுதிகளை நாட்டின் பிற நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் உதவும் என மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com