கேரள உயா்நீதிமன்றம்
கேரள உயா்நீதிமன்றம்

வயநாட்டுக்கு மத்திய உதவியில் தாமதம்: கேரள உயா்நீதிமன்றம் அதிருப்தி

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு உதவி வழங்குவதில் தாமதம்
Published on

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு கேரள உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை மாநிலத்துக்கு ஏற்படுத்தியது. அவசர நிலையும் பொருள்படுத்தாமல் மத்திய அரசின் உதவியில் தாமதம் ஏற்பட்டுள்ளதை கண்டித்து மாநில பிரதிநிதிகள் உடனடி உதவியைக் கோரி வருகின்றனா்.

இதனிடையே, தில்லியில் உள்ள கேரள மாநிலத்தின் சிறப்பு பிரதிநிதி பேராசிரியா் கே.வி.தாமஸ், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் இது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்தினாா். மத்திய உதவியை விரைவாக வழங்க அவா் வலியுறுத்தினாா். இயற்கை பேரிடா்களுக்குப் பிறகு பல மாநிலங்கள் மத்திய அரசின் உதவிகளைப் பெற்றபோதும், கேரள மாநிலம் இன்னும் உதவியைப் பெறவில்லை என்று சந்திப்பின் போது தாமஸ் சுட்டிக்காட்டினாா்.

இதையடுத்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விவகாரம் குறித்து பிரதமா் மோடியுடன் விவாதித்த பிறகு வயநாடுக்கு உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை தாமாக முன்வந்து பரிசீலித்த கேரள உயா்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்ததுடன், வயநாடு பேரிடா்களுக்கு அளிக்கப்பட்ட உதவி விவரங்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com