
ஒரு தொழிலதிபரின் மறைவுக்கு நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது என்றால், அது ரத்தன் நேவல் டாடாவின் மறைவாகதான் இருக்கும்.
முதுமை தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த ரத்தன் டாடா(வயது 86) புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
புரட்சியாளர்
இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்புரட்சியை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர் ரத்தன் டாடா. இவரின் வாழ்க்கை நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் முதல் கடைக்கோடி இளைஞர்கள் வரை உதாரணமாக உள்ளது.
ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த ரத்தன் டாடா, அமெரிக்க முன்னணி நிறுவனம் அளித்த வேலை வாய்ப்பை உதறிவிட்டு இந்தியா வந்தார். அங்கு தொடங்கிய ரத்தன் டாடாவின் பயணம், உலகளவில் முன்னணி நிறுவனமாக தனது நிறுவனத்தை உயர்த்திக் காட்டினார்.
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தொழிற்புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
உப்பு தயாரிக்கும் ஆலை முதல் மென்பொருள் நிறுவனம் வரை இவர் கட்டமைத்த டாடா குழுமத்தின் தற்போதைய வருமானம் 165 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
டாடா குழுமத்தின் தலைவராக 1991 முதல் 2012 வரையிலும், அதன்பிறகு 2016-இல் மீண்டும் இடைக்காலத் தலைவராகவும் பொறுப்பேற்று, உலகம் முழுவதும் தனது நிறுவனத்தை விரிவடையச் செய்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தார்.
கனவை நனவாக்கியவர்
கார் வாங்குவது என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில், ’டாடா நானோ’ என்ற ஒற்றை திட்டத்தால் சாமானியனின் கனவை நனவாக்கினார் ரத்தன் டாடா.
ஒரு லட்சத்துக்கு ’டாடா நானோ’ காரை விற்பனை செய்து ஓட்டு வீட்டுக்கு வெளியேகூட காரை நிற்கும் அளவில் புரட்சி செய்தார்.
உலக பணக்காரர் பட்டியலில் இல்லாதது ஏன்?
ஒரு தொழிலதிபரின் கடைசிக் கனவாக இருப்பது உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெறுவதே. ஆனால், பல நாடுகளில் தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த ரத்தன் டாடா, இதுவரை ஒருமுறைகூட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றதில்லை.
அதற்கு காரணம், டாடா குழுமத்தின் 66 சதவீத லாபப் பணத்தை டாடா அறக்கட்டளைக்கு பயன்படுத்துதான். டாடா அறக்கட்டளை மூலம், கல்வி, மருத்துவம், வாழ்வாதார முன்னேற்றம், கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை செயல்படுத்தி வந்தார் ரத்தன் டாடா.
டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், கடைசி மூச்சு உள்ளவரை டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடா தொடர்ந்து வந்தார்.
இறுதியாக கடந்த ஜூலை 1ஆம் தேதிகூட, டாடா அறக்கட்டளை சார்பில் முதல் கால்நடை மருத்துவமனையை தொடங்கிவைத்து, அதன் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
டாடா நிறுவனத்தின் மும்பை தாஜ் ஹோட்டலில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு, அதிலிருந்து நிறுவனத்தை மீட்டெடுத்தது, 90 ஆண்டுகளுக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட தனது குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் அரசிடம் இருந்து வாங்கியது என்று பல சாதனைகளையும் ரத்தன் டாடா படைத்துள்ளார்.
விருதுகள்
தொழில்துறை மூலம் தேசத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிக்காக இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷணை 2000-ஆம் ஆண்டும், பத்ம விபூஷண் விருதை 2008-ஆம் ஆண்டும் வழங்கி அரசு கெளரவித்தது.
இதனிடையே, இன்றுவரை நாட்டு மக்கள் பலராலும், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஒரு தொழிலதிபராக தேசத்துக்கு எவ்வாறான பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதை வாழ்ந்து காட்டி, மறைந்திருக்கிறார் ரத்தன் டாடா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.