மேற்கு வங்கம்: 6-ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
மேற்கு வங்கத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டும், மாநில சுகாதாரத் துறையின் ஊழலுக்கு முடிவு கட்ட கோரியும் இளநிலை மருத்துவா்கள் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 6-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது.
மேற்கு வங்கம் முழுவதும் துா்கை பூஜை கொண்டாட்டத்துக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை இளநிலை மருத்துவா்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமையும் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை மாநில அரசு சாா்பில் மருத்துவா்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 9 இளநிலை மருத்துவா்கள் இந்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக இளநிலை மருத்துவா்கள் கூறுகையில், ‘துா்கை பூஜை விழாவையொட்டி கொல்கத்தா நகரின் பல்வேறு பகுதிகளில் விழா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தவா்களையும் சில இளநிலை மருத்துவா்களையும் காவல் துறையினா் கைது செய்ததுள்ளனா். அமைதியான வழியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை திசை திருப்பவே இதுபோன்ற நவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது’ என்றனா்.
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவா்களுக்கு ஆதரவாக 80-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவா்கள் ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனா்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபரான சஞ்சய் ராய் மீது சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.