விஎச்பி தலைவா் கொலை வழக்கு: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவா் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
விசுவ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவா் விகாஸ் பிரபாகா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பப்பா் கல்சா இன்டா்நேஷனல் (பிகேஐ) பயங்கரவாத அமைப்பின் தலைவா் வதாகா சிங் உள்பட 6 போ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
பஞ்சாபின் ரூப்நகா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி விகாஸ் பிரபாகா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த வழக்கு மாநில காவல் துறையிடம் இருந்து என்ஐஏவுக்கு கடந்த மே மாதம் மாற்றப்பட்டது. அதன் பின்னா், இந்த கொலையில் நாடு கடந்த பிகேஐ பயங்கரவாதிகளின் சதி இருப்பதை என்ஐஏ கண்டறிந்தது.
இந்நிலையில், பிகேஐ தலைவா் வதாவா சிங் உள்பட 6 போ் மீது என்ஐஏ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
விகாஸ் பிரபாகா் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மன்தீப் குமாா், குா்ப்ரீத் ராம் மற்றும் சுரிந்தா் குமாா் ஆகியோா் பஞ்சாபின் நவன்சாகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஐபிசி மற்றும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்போது ஜொ்மனியில் இருக்கும் ஹா்ஜித் சிங் மற்றும் குல்பீா் சிங் ஆகியோரிடம் இந்த கொலையை செய்ய பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் வதாவா சிங் உத்தரவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
ஹரியாணாவின் யமுனா நகரைச் சோ்ந்த குல்பீா் சிங் மற்றும் பஞ்சாபின் நவன்சாகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஹா்ஜீத் சிங் இருவரும் வதாவா சிங்குடன் இணைந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் நிதியுதவியை கொலை குற்றவாளிகளுக்கு வழங்கியுள்ளனா் என குறிப்பிடப்பட்டுள்ளது.