பாபா சித்திக் கொலை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் சதித்திட்டம்!

பாபா சித்திக் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா சித்திக் / லாரன்ஸ் பிஷ்னோய்
பாபா சித்திக் / லாரன்ஸ் பிஷ்னோய்
Published on
Updated on
2 min read

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பாபா சித்திக் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாபா சித்திக் நேற்று இரவு தனது அலுவலகத்தின் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் 3 நபர்கள் ஈடுபட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து ஹரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (23) மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் காஷ்யப் (19) ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மூன்றாவது நபரான உ.பி.யைச் சேர்ந்த ஷிவ் குமார் என்பரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலைச் சம்பவத்தில் நான்காவதாக ஒரு நபர் இவர்களுக்குத் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகித்து அது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது கைதாகியுள்ள இரு நபர்களும் காவல்துறை கண்காணிப்பில் உள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்குத் தொடர்பு

நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் தனது உதவியாளருடன் இருந்த பாபா சித்திக்கை இந்தக் கூலிப்படை கும்பல் மார்பில் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்று பல மணி நேரத்திற்கு பின்னர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதற்கு பொறுப்பேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிபட்ட குற்றவாளிகள் போலீஸ் விசாரணையில் இதனைத் தெரிவித்துள்ளதாகவும், மேலும் வேறு காரணங்கள் உள்ளனவா என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில், ஒரு மாத காலமாக இந்தக் கும்பல் சித்திக்கின் வீடு மற்றும் அலுவலகத்தைக் கண்காணித்துள்ளனர். கொலைக்கு முன்னதாக ரூ. 50,000 முன்பணமாகப் பெற்ற கும்பல், கொலை செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னரே ஆயுதங்களைப் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெற்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு

இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது. அதில் அந்த நபர், “நடிகர் சல்மான் கான் மற்றும் நிழல் உலக தாதாக்களான தாவூத் இப்ரஹிம், அனுஜ் தாப்பன் ஆகியோருடன் இருந்த தொடர்பின் காரணமாகவே பாபா சித்திக் கொல்லப்பட்டார். எங்களுக்கும் சித்திக்குடன் எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. சல்மான் கான் மற்றும் தாவூத் கும்பலுக்கு உதவுவோர் அனைவரும் இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். தயாராக இருக்கவும். எங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். எப்போதுமே நாங்கள் முதலில் தாக்கமாட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான் வீட்டிற்குப் பாதுகாப்பு

பாபா சித்திக் கொலையானதற்குப் பின்னர் சல்மான் கானின் வீட்டிற்கு மும்பை போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பும் சல்மான் கான் வீட்டின் முன் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானைக் கொல்ல பிஷ்னோய் கும்பலிடம் ரூ. 25 லட்சம் வாங்கியதாகவும், இதற்கான திட்டம் பல மாதங்களாகத் தீட்டப்பட்டு வந்ததாகவும் பிடிபட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குடிசை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாகவோ அல்லது லாரன்ஸ் பிஷ்னோய் அமைப்பின் திட்டத்தினாலோ இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற இரு கோணங்களிலிலும் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சிகள் கடந்து அனைத்து அரசியல்வாதிகளுடனும் பாபா சித்திக் தோழமையில் இருந்ததால் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் அவரது கொலைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com