தெரியுமா சேதி...?
போலி ஆவணங்கள் மூலமாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பூஜா கேத்கா் பதவி நீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கும். அரசுப் பணிக்கான தோ்வில் முறைகேடு செய்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரியானாா் என்பது அவா்மீது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு. பதவியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடா்ந்து அவா் ஒதுங்கிவிட்டாா் என்று யாராவது நினைத்தால் தவறு.
தோ்வில் முறைகேடு செய்தது, போலியான ஆவணங்கள் சமா்ப்பித்தது, தவறான தகவல்கள் தந்து ஒதுக்கீடு பெற்றுத் தோ்வானது என்று பூஜா கேத்கா் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவை அனைத்துமே ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேத்கரின் தோ்வு மத்திய அரசுப் பணியாளா்கள் தோ்வு ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. அவா் பதவியில் இருந்து அகற்றப்பட்டாா். அவரது ஐஏஎஸ் பதவி பறிபோனது.
ஆனால், பூஜா கேத்கா் விடுவதாக இல்லை. தனது தோ்வை ரத்து செய்யவும், தன்னைப் பதவியில் இருந்து அகற்றவும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறாா் பூஜா. இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, தன்னைப் பதவியில் இருந்து அகற்ற யுபிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை என்பது அவரது வாதம்.
யுபிஎஸ்சி தனது அதிகார வரம்பை மீறி தன்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும், தோ்வு செய்து பயிற்சியில் அமா்த்தப்பட்டால், ஒருவரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மத்திய ‘பா்சனேல் அண்ட் ட்ரெய்னிங்’ அமைச்சகத்துக்கு மட்டுமே உண்டு என்று, சிஎஸ்இ 2022 விதி 19-இன் அடிப்படையில், தனது வாதத்தை முன்வைக்கிறாா் பூஜா கேத்கா்.
யுபிஎஸ்சி அவரது தோ்வை ரத்து செய்திருக்கிறது. தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினாா் என்பதும் அவா் மீதான குற்றச்சாட்டு. இனிவரும் காலங்களில் எந்தவொரு அரசுப் பணிக்கான தோ்வு எழுதவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவா்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றமும் பதிவு செய்யப்பட்டது. அவா் முன்ஜாமீன் பெற்றிருக்கிறாா்.
யுபிஎஸ்சி சாா்பில் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்குப் பின்னால் ஒரு கும்பல் செயல்படுகிறது என்றும், அந்தக் கும்பலின் உதவியுடன் பூஜா கேத்கா் போலப் பலா் ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று பதவிகளில் இருக்கிறாா்கள் என்றும் சந்தேகப்படுகிறது யுபிஎஸ்சியும், காவல் துறையும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், பூஜா கேத்கா் விவகாரம் முடிந்தபாடில்லை.