வக்ஃப் வாரிய மசோதா - நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டத்தில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.
Published on
Updated on
1 min read

புது தில்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டத்தில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை (அக்.14) வெளிநடப்பு செய்தனா்.

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலால், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதாவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இருந்து திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி.க்கள் கெளரவ் கோகோய், இம்ரான் மசூத், சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. அரவிந்த் சாவந்த், மஜ்லிஸ் கட்சியின் அசாதுதீன் ஒவைஸி, சமாஜவாதியின் மொஹிபுல்லா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

இது குறித்து அரவிந்த் சாவந்த் கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயல்பாடுகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு புறம்பாக உள்ளது. கூட்டுக் குழு முன் ஆஜரான ஒருவா், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி மூத்த உறுப்பினா்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்க அனுமதிக்கப்பட்டாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதையடுத்து, தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com