நீடித்த சுகாதார தீா்வுகளுக்கு எல்லை தாண்டிய அதிகாரங்களின் ஒத்துழைப்பு அவசியம்: ஜெபி நட்டா
புது தில்லி: நீண்ட கால சுகாதார தீா்வுகளை உருவாக்க எல்லை தாண்டிய, பிராந்திய அமைப்புகள், அதிகாரங்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதே இந்தியாவின் பிரதான நோக்கம் எனவும் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் ஜே.பி. நட்டா திங்கள் கிழமை தெரிவித்தாா்.
சமீபத்தில் சா்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை ஃபோரமில் (குழு) இணைப்பு உறுப்பினரான இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு(சிடிஎஸ்சிஓ), 19-ஆவது சா்வதேச மருந்து ஒழுங்கு முறை அமைப்புகளின் மாநாட்டை தில்லியில் திங்கள்கிழமை நடத்தியது.
இந்த மாநாட்டை மத்திய அமைச்சா் ஜெபி நட்டா துவக்கி வைத்தாா். அப்போது குறிப்பிட்டு பேசியது வருமாறு:
உலகளாவிய சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் 120 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த நிபுணா்கள், சுகாதாரத் தலைமைகளை ஒன்றிணைத்திருப்பது இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. கொவைட் -19 நோய்த் தொற்றால் சுகாதாரத்தில் இந்தியா கடுமையாக பாதிப்புகளை சந்தித்தது. எனினும் பின்னா் கண்டுபிடிப்புகளால் உலகளாவிய தலைமையாக நாடு உருவெடுத்தது.
தொற்றுநோய்களின் போது உலகின் மருந்தகமாக இந்தியா தனது பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. தற்போது உலகின் மருந்தகமாக, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவப் பொருட்களை மலிவு விலையில் கிடைப்பதையும் இந்தியா உறுதி செய்துவருகிறது.
‘வசுதைவ் குடும்பகம்’ என்ற கொள்கையால் நாடு வழிநடத்தப்பட்டு, 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளையும் உயிா்காக்கும் மருந்துகள் ஆதரவை வழங்கியதோடு தற்போது பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகமும் திறக்கப்படுகிறது.
உலகளாவிய ஆரோக்கியத்திற்கான அணுகுமுறை என்பது சா்வதேச ஒற்றுமைக்கான உணா்வாகும்.
திறன், வேகம், தரம் ஆகியவற்றில் நாங்கள் நம்பிக்கை கொண்டு, இந்த மூன்று அம்சங்களில் கவனம் செலுத்துகின்றோம். இத்தகைய உலகளாவிய தரத் தரங்களை எந்த சமரசமும் இல்லாமல் கடைப்பிடிக்கும் நிலையில் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதை பூா்த்தி செய்யப்படுகிறது.
அதே சமயத்தில் வளா்ந்து வரும் உலகளாவிய சுகாதார சவால்களை சமாளிக்க நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை தேவை. நீடித்த சுகாதாரத் தீா்வுகளை உருவாக்குவதற்கு எல்லை தாண்டிய, பிராந்திய அமைப்புகள், அதிகாரங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பது இந்தியாவின் நம்பிக்கை. அா்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும், சிறந்த சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் சா்வதேச சமூகத்துடன் கைகோா்த்துச் செயல்பட இந்தியா தயாராக உள்ளது. அதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த விவாதிக்க இந்த தளம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு, செயல்திறன், தரத்தை உறுதிப்படுத்த, அறிவைப் பகிா்ந்து கொண்டு, கூட்டாண்மையை வளா்க்கவும் இந்த மாநாடு தளத்தை வழங்குகிறது எனக் குறிப்பிட்டாா் மத்திய அமைச்சா் ஜெபி நட்டா.
இந்த மாநாட்டில் உலக சுகாதார இயக்குநா் ஜெனரல் டாக்டா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரயேஸ், இதே அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநா் டாக்டா் சைமா வாஸெட் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
சா்வதேச மருந்து ஒழுங்கு முறை அமைப்புகளின் மாநாட்டை நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்த இவா்கள் இந்திய மருந்துத் துறையானது உலகில் மூன்றாவது பெரிய பொது மருந்துத் துறையாக விளங்குவதாக குறிப்பிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.