
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார்.
ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரைக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின்படி சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கின. இதில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் மும்பை- ஜுஹு பகுதியில் உள்ள வீடு, புணேவில் இருக்கும் வீடுகளும் அடங்கும்.
ஷில்பாவும் அவரது கணவரும் அமலாக்கத்துறை முடக்கியதுக்கு எதிராக சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள். அதில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஊடகங்கள், யூடியூப்பில் தன் மீதான அவதூறு செய்திகளுக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்துள்ளார் ராஜ் குந்த்ரா.
மும்பையில் ஜுஹு காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 356 (3) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தன் மீது வேண்டுமென்றே கலங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம்மும் அனுமதியளித்துள்ளது.
இது குறித்து ராஜ் குந்த்ரா கூறியதாவது:
இந்த முடிவை எடுக்க ஊடகங்களால் கட்டாயப்படுத்தப்பட்டேன். பலமுறை ஊடகங்கள் என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு தவறான தகவல்களை பழிசுமத்தும் நோக்கத்தில் வெளியிட்டு என்னைக் களங்கப்படுத்தியுள்ளார்கள். அதையெல்லாம் நீக்குமாறு அவர்களுக்கு நான் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அதற்கான காலாவகாசமும் கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் நீதிமன்ற விசாரணை நிலையில் இருக்கிறேன். என்னை விடுவிக்கும்படி நான் போராடி வருகிறேன்.
3 வருடங்கள் ஆகின்றன. அதற்குள்ளாக 3 நீதிபதிகள் மாறிவிட்டார்கள். நீதியின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில் இது எரிச்சலூட்டுவதாகவும் இருக்கிறது. நீதிமன்ற விசாரணையுள்ள என்னை ஊடகங்கள் குற்றவாளியாக மாற்றுவது சரியல்ல என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.