ஜம்மு - காஷ்மீர் அமைச்சர் வாய்ப்பை நிராகரித்த காங்கிரஸ்?

ஜம்மு - காஷ்மீர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஒமர் அப்துல்லா.
தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்.
தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்.ANI
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீர் அமைச்சர் வாய்ப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா இன்று பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா்.

ஸ்ரீநகரில் உள்ள ஷோ்-இ-காஷ்மீா் மாநாட்டு அரங்கில் காலை 11.30 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஒமா் உள்ளிட்டோருக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்க உள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மாா்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்ற நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும் ஆம் ஆத்மியும் (1) ஆதரவு தெரிவித்தால் மொத்த பலம் 54-ஆக உள்ளது. இதையடுத்து, சட்டப் பேரவை தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு தலைவராக ஒமா் அப்துல்லா தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் அமைச்சரவையில் ஒரு இடத்தை காங்கிரஸுக்கு அளிக்க தேசிய மாநாட்டுக் கட்சி முன்வந்ததாகவும், ஆனால், காங்கிரஸ் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமைச்சரவைக்கு வெளியில் இருந்து தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய ஒமர் அப்துல்லா, மொத்தமுள்ள 9 அமைச்சர் பதவிகளையும் நிரப்பப் போவதில்லை, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக மூத்த தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. அத்துடன், கடந்த 2019-இல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.

இந்த யூனியன் பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்து வந்தது. தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்கும் வகையில், குடியரசுத் தலைவா் ஆட்சி ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com