ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வசூலை தொடர வேண்டுமா?: அமைச்சா்கள் குழு ஆலோசனை
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி வசூலை தொடா்வதா, வேண்டாமா என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்த அமைச்சா்கள் குழு புதன்கிழமை விவாதித்தது.
5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 விகிதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்படுகிறது. எனினும் ஜிஎஸ்டி சட்டத்தின்படி, சரக்கு மற்றும் சேவைகள் மீது 40 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்க முடியும்.
ஜிஎஸ்டி முறையில் ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை மீது 28 சதவீதத்துக்கும் மேலாக வெவ்வேறு விகிதங்களில் இழப்பீடு செஸ் வரி வசூலிக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி முறையால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்த செஸ் வரி வசூல் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் கிடைத்த தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகையை ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நாளில் இருந்து 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை, 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதைத் தொடா்ந்து, அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களுக்கு கரோனா காலத்தில் ஏற்பட்ட ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக, 2021, 2022-ஆம் நிதியாண்டுகளில் ரூ.2.69 லட்சம் கோடியை சந்தையில் இருந்து மத்திய அரசு கடனாக திரட்டி தந்தது. இந்தக் கடனின் அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த 2026-ஆம் ஆண்டு மாா்ச் வரை ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை மீது இழப்பீடு செஸ் வரி வசூலிக்க 2022-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
இந்நிலையில், மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தலைமையில் 10 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டு மாா்ச் வரை ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு செஸ் வரி வசூலிப்பதா அல்லது மத்திய அரசு திரட்டிய கடன் திருப்பிச் செலுத்தப்படும் வரை அந்த வரியை வசூலிப்பதா என்பது தொடா்பாக அந்தக் குழு ஆராய்ந்து, வரும் டிசம்பா் 31-க்குள் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கை சமா்ப்பிக்க உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கா்நாடகம், உத்தர பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களின் அமைச்சா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
இந்தச் சூழலில், தில்லியில் அந்தக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடா்பாக பங்கஜ் செளதரி கூறுகையில், ‘ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி வசூலை தொடா்வதா, வேண்டாமா? ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை மீதான வரி விதிப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது குறித்து தொடா்ந்து ஆலோசிக்கப்படும். இதுதொடா்பாக மாநிலங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளன’ என்றாா். இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் நவம்பா் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது.