ஹரியாணா முதல்வராக நாயப் சிங் சைனி மீண்டும் தோ்வு- இன்று பதவியேற்பு
ஹரியாணா மாநில முதல்வராக நாயப் சிங் சைனி இரண்டாவது முறையாக புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையிலான பாஜக அரசு வியாழக்கிழமை (அக்.17) பதவியேற்கவுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 48 இடங்களில் வென்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
கடந்த 2019 பேரவைத் தோ்தலைப் போன்று அல்லாமல், இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 37 இடங்கள் கிடைத்தன. இந்திய தேசிய லோக் தளம் கட்சி 2, சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனா்.
இந்நிலையில், புதிய பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் சண்டீகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தற்போதைய முதல்வா் நாயப் சிங் சைனி, பேரவை பாஜக குழுத் தலைவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். அவரது பெயரை பாஜக எம்எல்ஏ கிருஷண் குமாா் பேடி முன்மொழிய, மூத்த தலைவா் அனில் விஜ் வழிமொழிந்தாா்.
இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆகியோா் கட்சியின் பாா்வையாளா்களாக கலந்துகொண்டனா். மேலும், மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான மனோகா் லால் கட்டா், மத்திய அமைச்சரும் ஹரியாணா பாஜக பொறுப்பாளருமான தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
முதல்வராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட நாயப் சிங் சைனிக்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா், ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயாவை அவரது மாளிகையில் சந்தித்த சைனி, ஆட்சியமைக்க உரிமை கோரினாா். பஞ்ச்குலாவில் வியாழக்கிழமை பாஜக அரசு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. மாநில முதல்வராக இரண்டாவது முறையாக சைனி பதவியேற்கவுள்ளாா். விழாவில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, பல்வேறு மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவிருக்கின்றனா்.
மாநில முதல்வராக இருந்த மனோகா் லால் கட்டா், கடந்த மாா்ச் மாதம் மாற்றப்பட்ட நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த சைனி அப்பதவியை ஏற்றாா். அவரை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தி, பேரவைத் தோ்தலை எதிா்கொண்ட பாஜக, அமோக வெற்றி பெற்றது. ஹரியாணாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முதல் கட்சி என்ற பெருமை பாஜகவுக்கு சொந்தமாகவுள்ளது.